Published : 09 Aug 2019 12:57 PM
Last Updated : 09 Aug 2019 12:57 PM
நியூயார்க்,
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச பொறுமையுடன் நடக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டோனியோ கட்டர்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து, ஐ.நா.வுக்குக் கடிதம் எழுதியது. மேலும் சர்வதேச சமூகத்தின் உதவியையும் அந்நாடு கோரியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானே துஜாரிக் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''ஜம்மு காஷ்மீரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஐ.நா. பொதுச்செயலாளர் உன்னிப்பாகவும், அக்கறையுடனும் கவனித்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அதிகபட்ச பொறுமையுடன் நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 1972-ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கையொப்பமானது. அது சிம்லா ஒப்பந்தம் என்று அறியப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின்படி ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இரு நாடுகளுக்கும் இடையே தூதராகவும், நடுவராகவும் இருந்து சமரசம் செய்வது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தின் மூலமே, இரு நாடுகளும் மட்டும் பேசிக்கொள்ள வேண்டும். மூன்றாவது நபர் தலையிடக்கூடாது என்பதுதான். சிம்லா ஒப்பந்தத்தின்படி, ஜம்மு காஷ்மீரின் அப்போதைய நிலை மாறாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரு நாடுகளும் தடுக்கப்பட வேண்டும்.
இருநாடுகளுக்கும் இடையிலான இந்த விஷயத்தை ஐ.நா. தலைவரும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து[ப் பேசுவதற்கு பாதுகாப்புச் செயலாளருக்கு எந்தவிதமான திட்டமும் இல்லை".
இவ்வாறு ஸ்டெபானே துஜாரிக் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT