Published : 09 Aug 2019 12:20 PM
Last Updated : 09 Aug 2019 12:20 PM
வாஷிங்டன், பிடிஐ
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியையும், பொறுமையயும் கடைபிடிக்க வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்து, ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் சர்வதேச சமூகத்தின் உதவியையும் அந்நாடு கோரியுள்ளது. இதனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓட்டாகஸ் வாஷிங்டனில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவரிடம் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர் பதில் அளிக்கையில், "ஜம்மு காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா, பாகிஸ்தான் இடையிலான விவகாரம். இரு நாடுகளும் அமைதியாகவும், பொறுமையாகவும் இருத்தல் வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் எந்தவிதத்திலும் மாற்றமில்லை. அவ்வாறு ஏதேனும் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இருந்தால், நாங்கள் தெரிவிக்காமல் இருக்கப் போவதில்லை. நிச்சயம் அறிவிப்போம்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சு தொடர வேண்டும் என்பதில் அமெரிக்க ஆர்வமாக இருக்கிறது, அதற்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்போம். இரு தெற்காசிய நாடுகளுடனும் நாங்கள் நெருக்கமாகவே இருந்து வருகிறோம். சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்கா வந்திருந்தார்.
அவர் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசுவதற்காக மட்டும் இங்கு வரவில்லை. பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம். அதேசமயம், காஷ்மீர் விவகாரமும் முக்கியமானது, தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். காஷ்மீர் விவகாரம் மட்டுமல்லாது பல்வேறு விவகாரங்கள், பிரச்சினைகள் ஆகியவற்றுக்காக இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுடன் அமெரிக்கா தொடர்ந்து நெருக்கமாகவே செயலாற்றி வருகிறது" என்று தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியிருப்பது குறித்து அமெரிக்காவின் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு ஓர்டாகஸ் பதில் அளிக்கையில், " நான் ஏற்கெனவே சொன்னதுதான். இந்த விவகாரம் இருநாடுகளுக்கு இடையிலானது என்பதால், அதற்கு அப்பாற்பட்டு இந்த விஷயத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் மனித உரிமை மீறல் நடக்கிறதா? என்பது உறுதி செய்யப்படாத விஷயம்.
உலகின் எந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டாலும், சட்டத்தின்படி நடந்து கொள்ளுங்கள் என்று மக்களிடம் கூறுவோம், மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், சர்வதேச விதிகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்று சம்பந்தப்பட்ட நாடுகளிடம் அமெரிக்கா வலியுறுத்தும்.
எங்களைப் பொறுத்தவரை ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் அமைதி, பாதுகாப்பை உறுதிசெய்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரின் நிலவரங்களை, அங்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளை மிகவும் உன்னிப்பாக, அக்கறையுடன் கவனித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT