Published : 08 Aug 2019 10:54 AM
Last Updated : 08 Aug 2019 10:54 AM

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் ரத்து செய்யப்பட்டதை உன்னிப்பாக கவனிக்கிறோம்: அமெரிக்கா கருத்து 

வாஷிங்டன்,
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு சலுகைகள் வழங்கும் அரசமைச்சட்டம் 370-வது பிரிவு இந்தியா திரும்பப் பெற்று, காஷ்மீரை இரண்டாகப் பிரி்த்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச்சட்டம் 370-வது பிரிவை திரும்பப் பெற்று சட்டத்திருத்த மசோதா கொண்டுவந்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய அரசு நிறைவேற்றியது.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் பகுதியை சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் அரசு, இந்தியத் தூதர் அஜய் பசாரியாவை அந்நாட்டை விட்டு வெளியேற்றியது. மேலும் இந்தியாவின் செயல்பாடு சட்டவிரோதம், தன்னிச்சையானது என்று தெரிவித்தது. இந்தியாவுடனான வர்த்தக ரீதியான உறவையும் தற்காலிகமாக துண்டித்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் அரசு சீனா, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி பேசி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அதை இரு மாநிலங்களாக இந்திய அரசு பிரித்த விவகாரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய எல்லையில் நிலவும் பதற்றமான சூழல், நிலையற்ற தன்மை, இந்திய அரசின் முடிவால் ஏற்படும் தாக்கங்கள் ஆகியவற்றை நாங்கள் கவனித்து வருகிறோம்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் பதற்றத்தை போக்கும் வகையில் பேச்சு நடத்த வேண்டும், தெற்கு ஆசியப் பிராந்தியத்தில் ராணுவத்தை குவிக்கும் விஷயத்தை தவிர்க்க வேண்டும்.
அதேசமயம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு உரிமைகள் ரத்து செய்யும் முன், இந்தியா எங்களிடம் எந்தவிதமான தகவலும் தெரிவிக்கவில்லை. அது குறித்து ஆலோசிக்கவும் இல்லை. அதுதொடர்பாக வரும் செய்திகளை மறுக்கிறோம்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரு நாடுகளும் அமைதி காக்கும்படிதான் அமெரிக்கா கேட்டுக்கொள்கிறது.
ஜம்மு காஷ்மீர் மக்கள் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருப்பதும், சுதந்திரமாக வெளியே நடமாட தடைகள் விதித்து இருப்பதும் கவலையளிக்கிறது, தனிப்பட்ட நபர்களின் உரிமைகளுக்கும், சட்டவிதிகளுக்கு கட்டுப்படுவதையும் நாங்கள் மதிக்கிறோம்.
அதேசமயம், பாதிக்கப்புக்கு உள்ளான பகுதி மக்களிடம், பிரதிநிதிகளிடம் முழுமையான பேச்சுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரு தரப்பினரும் அமைதி காத்து, பிராந்தியத்தில் நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். எல்லை கடந்து வரும் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட வலிமையான, தீர்மான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
இந்தியாவும், பாகிஸ்தான் இடையே நிலவும் பல்வேறு விவகாரங்கள், பிரச்சினைகள், காஷ்மீர் விவகாரம் ஆகியவை குறித்து தொடர்ந்து நேரடி பேச்சின் மூலம் தீர்க்க வேண்டும் என்பதற்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு தருவோம்
இவ்வாறு அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x