Published : 07 Aug 2019 01:57 PM
Last Updated : 07 Aug 2019 01:57 PM

காஷ்மீர் விவகாரம்; 1948-ம் ஆண்டு ஐ.நா. தீர்மானத்தை இந்தியா மீறியதா? - ஐ.நா. பதில் என்ன?

நியூயார்க்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவை இந்தியா நீக்கிய நிலையில் அது 1948-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறிய செயலா? என்ற கேள்விக்கு ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஐ.நா. தீர்மானம் என்ன?

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்காக இரு நாடுகளும் போரிட்டுக்கொண்டன. அப்போது தலையிட்ட ஐ.நா. இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்துவைத்தது. மேலும், காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண கடந்த 1948-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி 2 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.

இதன்படி காஷ்மீரில் இருந்து அனைத்துப் படைகளையும் பாகிஸ்தான் திரும்பப் பெற வேண்டும். 2-வதாக இந்திய அரசு அனைத்துப் படைகளையும் படிப்படியாக திரும்பப்பெற்று, சட்டம் ஒழுங்குக்குத் தேவையான படைகளை மட்டும் வைத்திருக்க வேண்டும். இறுதியாக, ஐ.நா. மேற்பார்வையில் காஷ்மீர் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி அவர்களின் விருப்பத்தை அறிதல் போன்றவையாகும்.

370 பிரிவு நீக்கம்

ஐ.நா.வின் மேற்பார்வையின்படி பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கூறிய நிலையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா தொடர்ந்து கூறி வந்தது. இந்த சூழலில் நேற்று முன்தினம் மத்திய அரசு கொண்டு வந்த ஜம்மு காஷ்மீர் மாநில சீரமைப்புத் திருத்த மசோதா மாநிலங்களவையிலும், மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புச் சலுகைகளுக்கான 370-வது பிரிவில் திருத்தம் செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர மாநிலம் சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஐ.நா. தீர்மானத்தை இந்தியா மீறிவிட்டதாகக் கூறி பாகிஸ்தான் தரப்பில் ஐ.நா.வுக்குக் கடிதமும் எழுதப்பட்டது.

ஐ.நா. பதில்

இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டேன் துஜாரிக் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் காஷ்மீர் விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில், " ஜம்மு காஷ்மீரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்பதை தெளிவாகக் கூறிவிட்டோம். பொதுச்செயலாளர் பார்வையில், சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன், பிராந்தியத்தில் அமைதி நிலவும் வகையில் நடக்க வேண்டும் என்று தெரிவிக்கிறோம்" என்றார்.

கடந்த 1948-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறி, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை, இந்தியா நீக்கிவிட்டதாக பொதுச்செயலாளர் நினைக்கிறாரா? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், " நீங்கள் என்ன கேள்வி கேட்கிறீர்கள், என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். துரதிர்ஷ்டவசமாக இந்த நேரத்தில், என்னுடைய பதிலால் நீங்கள் திருப்தி அடையமாட்டீர்கள். இப்போது கருத்து கூறவும் இயலாது" எனத் தெரிவித்தார்.

பாக். கடிதம்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவு தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெகமூத் குரேஷி கடிதம் ஏதும் அனுப்பியுள்ளாரா? என்ற கேள்விக்கு துஜாரிக் பதில் அளிக்கையில், " நாளேடுகளில் வந்த செய்தியை அறிந்தேன். பாகிஸ்தான் அமைச்சர் அனுப்பிய கடிதம் கிடைத்திருந்தால் ஐ.நா. பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கும். ஆனால், கடிதம் கிடைத்தது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை. மீண்டும் அதுகுறித்து உறுதி செய்து நான் கூறுகிறேன் " எனத் தெரிவித்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பிரச்சினையில் ஐ.நா. தலைவர் தலையிடுவாரா? என்ற கேள்விக்கு துஜாரிக் பதில் அளிக்கையில், " இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் பதற்றம் அதிகரிப்பது கவலையளிக்கிறது. பொதுச்செயலாளர் பணியின்படி, அவருக்கு உரிய பணியை தொடர்ந்து செய்வார். அதில் மாற்றமில்லை. எந்த நாட்டுக்கும் சார்பில்லாமல் நடுநிலையுடன் செயல்படுவார் " எனத் தெரிவித்தார்.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x