Published : 07 Aug 2019 12:18 PM
Last Updated : 07 Aug 2019 12:18 PM

சமாதானப் பேச்சுவார்த்தையை இந்தியா பலவீனமாக நினைக்கிறது: ‘புல்வாமா’ போன்ற தாக்குதல் இனி அடிக்கடி நிகழும்; இம்ரான் கான்

புல்வாமா போன்ற தாக்குதல்கள் அடிக்கடி நடைபெறலாம். இந்தியா நம்மைத் தாக்கி நம் மீதே குற்றம் சுமத்தும். மீண்டும் அவர்கள் நம்மைத் தாக்குவார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் இந்தியாவின் அதிகாரபூர்வ பகுதி அல்ல, சர்ச்சைக்குரிய பகுதி என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது. ஐ.நா. உட்பட பல இடங்களில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில் பிற நாடுகளும், ஐ.நா. அமைப்பும் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், 370-வது பிரிவில் திருத்தம் கொண்டுவந்து, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து காஷ்மீரை, 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க வகை செய்யும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 125 எம்.பி.க்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் முடிவு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் பேசியதாவது:

''நாங்கள் இந்தியத் தேர்தல் முடிந்ததற்குப் பின்னர் காஷ்மீர் தொடர்பான விவகாரத்தைப் பேசித் தீர்க்கலாம் என்று இருந்தோம். தேர்தலும் முடிந்தது. ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இல்லை என்று திங்கட்கிழமை உணர்ந்துகொண்டேன். இது பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களிலும் இருந்தது.

அவர்கள் இனவாதத்தை தங்களது கருத்தியலாகக் கொண்டுள்ளனர். அந்தக் கருத்தியல்தான் மகாத்மா காந்தியைக் கொன்றது. அவர்கள் நமது சமாதானத்தைப் பலவீனமாகக் கருதினர். இனி இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கைகளை நிறுத்தப் போகிறோம்.

புல்வாமா தாக்குதலில் நம் விமானப் படை அவர்களுக்கே உரிய பாணியில் பதிலடி அளித்தது. நாம் அவர்களது விமானியை சுட்டுப் பிடித்தோம். ஆனால், போர் வேண்டாம் என்பதற்காக அந்த விமானியை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பினோம்.

புல்வாமா போன்ற தாக்குதல்கள் மீண்டும் நடைபெறலாம். நான் அதனை இப்போதே யூகித்துக்கொண்டேன். அவர்கள் நம்மைத் தாக்கி நம் மீதே குற்றம் சுமத்துவார்கள். மீண்டும் நம்மைத் தாக்குவார்கள். அதற்கு நாம் பதிலடி கொடுப்போம். இதன் பின்னர் என்ன நடக்கும்? யார் அந்தப் போரில் வெற்றிபெறப் போகிறார்கள். யாரும் இல்லை. இது உலகம் முழுவதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்''.

இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x