Published : 23 Jul 2019 10:56 AM
Last Updated : 23 Jul 2019 10:56 AM
வாஷிங்டன், பிடிஐ
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் அமைதிப்பேச்சில் எந்தவிதமான தீர்வும் கிடைக்காது. ஆதலால், ட்ரம்ப்பின் மத்தியஸ்தம் தேவை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை நேற்று வெள்ளை மாளிகையில் இம்ரான் கான் சந்தித்துப் பேசினார்.
அப்போது, இம்ரான் கானிடம் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப், " ஜப்பானில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்த ஜி20 மாநாட்டின்போது, பிரதமர் மோடியிடம் பேசினேன். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் நான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி என்னிடம் கோரிக்கை விடுத்தார்" எனத் தெரிவித்தார்.
ஆனால், அதிபர் டிரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. அதில் , "பிரதமர் மோடி, ஒருபோதும் காஷ்மீர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப்பை மத்தியஸ்தம் செய்யக் கேட்கவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் அமைதிப் பேச்சின் மூலமே தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. பாகிஸ்தான் எல்லை கடந்த தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பேச்சுக்கு இடமில்லை" எனத் தெரிவித்தது.
இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்புக்குப் பின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் மத்தியஸ்தம் தேவை என உணர்கிறீர்களா என நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பிரதமர் இம்ரான் கான் பதில் அளிக்கையில், "காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருபோதும் அமைதிப் பேச்சு மூலம் தீர்வு காண்பது சாத்தியமில்லை. இதற்கு முன் முன்னாள் அதிபர் முஷாரப், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோர் இருந்தபோது, ஒரு கட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வுகாணும் முடிவில் முன்னேற்றம் தென்பட்டது. ஆனால், அதன்பின், இரு நாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் இந்தியா முன்னோக்கி வர வேண்டும். காஷ்மீர் விவகாரப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகிக்கும், மத்தியஸ்தம் செய்வதில் அதிபர் ட்ரம்ப் நிச்சயம் முக்கியப் பங்கு வகிப்பார்.
இந்த பூமியில் உள்ள 130 கோடி மக்களுக்காக நான் பேசுகிறேன். காஷ்மீர் விவகாரத்தில் ஏதேனும் சுமுகமான தீர்வு ஏற்பட்டு அமைதி கிடைத்தால், அதன் பலன்களை எண்ணிப்பாருங்கள். அதிபர் ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்து காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவைத்தால், 130 கோடி மக்களின் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும்.
அணு ஆயுதங்களைப் பொறுத்தவரை, இந்தியா அணு ஆயுதங்களைக் கைவிட்டால், பாகிஸ்தானும் கைவிடும். ஏனென்றால், இரு நாடுகளிடமும் அணு ஆயுதம் இருப்பதால், அணு ஆயுதப் போர் என்பதை ஒரு வாய்ப்பாக வைத்திருப்பார்கள். இரு நாடுகளுக்குஇடையே அதிகபட்ச எல்லை என்பது 2500 மைல் மட்டுமே இருப்பதால், இரு நாடுகளுக்கு இடையிலான அணு ஆயுதப் போர் என்பதும் அது சுயஅழிவுக்குத்தான் இட்டுச் செல்லும்.
என்னைப் பொறுத்தவரை அணு ஆயுதப் போர் என்பது தீர்வாகாது.
கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக இருந்தபோதிலும் கூட, நாகரிகமான, பண்பட்ட நட்பு நாடுகளாக வாழமுடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம், ஒரே காரணம், காஷ்மீர் விவகாரம் மட்டும்தான்.
உலகின் சக்திவாய்ந்த நாடாகத் திகழும் அமெரிக்காதான், இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்டகாலமாக இருந்துவரும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண உதவ முடியும் " என இம்ரான் கான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT