Last Updated : 12 Jul, 2015 12:16 PM

 

Published : 12 Jul 2015 12:16 PM
Last Updated : 12 Jul 2015 12:16 PM

எகிப்து தலைநகர் கெய்ரோவில் தீவிரவாத தாக்குதல்: இத்தாலி தூதரகத்தில் குண்டுவெடிப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இத்தாலி தூதரகத்தில் நேற்று சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கெய்ரோவின் மத்தியப் பகுதியில் அல்-காலா தெரு உள்ளது. நகரின் முக்கிய வர்த்தக மையமான அந்தத் தெருவில் இத்தாலி தூதரகம் அமைந்துள்ளது. அங்கு நேற்று காலை 6.25 மணிக்கு காரில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது.

இதில் அவ்வழியாகச் சென்ற ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காயமடைந்தனர். அதிகாலை நேரம் என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. இதனால் அதிக உயிரிழப்பு நேரிடவில்லை என்று எகிப்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்பு காரணமாக இத்தாலி தூதரக கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. எனினும் தூதரக ஊழியர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எகிப்தின் சினாய் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு அரசுப் படைகளுக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி கண்டனம்

குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் போலோ ஜென்டிலோனி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

கெய்ரோவில் இத்தாலி தூதரகம் முன்பு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டிருப்பதை கடுமையாகக் கண்டிக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம். கட்டிட சேதம் காரணமாக இரு நாட்களுக்கு தூதரகம் மூடப்பட்டிருக்கும். அதன்பின் தூதரகப் பணிகள் வழக்கம்போல் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x