Published : 10 Jul 2015 03:42 PM
Last Updated : 10 Jul 2015 03:42 PM
கடும் பொருளாதார நெருக்கடியையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தையும் சந்தித்து வரும் கிரீஸ், கடன் கொடுத்த ஐரோப்பிய, அமெரிக்க கடனாளர்களை திருப்தி செய்யும் வகையில் பொருளாதார சீர்த்திருத்தங்களை சமர்ப்பித்துள்ளது.
வியாழக்கிழமைக்குள் சீர்திருத்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்க ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தியிருந்தன. ஆனால் கெடு முடிவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே கிரீஸ் பிரதமர் அலெக்சீஸ் சிப்ராஸ் நிர்வாகம் சமர்பித்து விட்டது. கிரீஸ் பிரதமர் அலெக்சீஸ் சிப்ராஸ் இடதுசாரி என்பதனாலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் காழ்ப்புக்கு ஆளாகி வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தச் சீர்திருத்தங்களை சமர்ப்பித்து அதனை அந்த நாடுகள் ஏற்றுக் கொண்டால், 3-வது பெரிய கடன் தொகை கிரீஸுக்கு அளிக்கப்படும் இல்லயெனில் கிரீஸ் யூரோவிலிருந்து வெளியேற்றப்படும். அதன் பிறகு அந்த நாட்டின் கதி என்னவாகும் என்பது கணிக்க முடியாததாகும்.
ஞாயிறன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகள், அதாவது யூரோ நாணயத்தை பயன்படுத்தும் 19 நாடுகள் மட்டுமல்லாது பிற நாடுகளும் கூடும் கூட்டம் ஒன்றில் கிரீஸ் ‘தலைவிதி’ தீர்மானிக்கப்படவுள்ளது.
கடனாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, அதாவது ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐ.எம்.எப். உள்ளிட்டவைகளின் வலியுறுத்தல்களுக்கு ஏற்ப சில சீர்திருத்தங்களை தங்களது முன்மொழிவில் குறிப்பிட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதை அதிகரித்தல், விற்பனை வரியை உயர்த்துதல், தனியார் மயத்தை விரைவில் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை முன்மொழிந்துள்ளது.
ஜூன் 30-ம் தேதி முடிவடைந்த காலக்கெடுவுக்கு முன்னால் கிரீஸ் உறுப்பினர்கள் யூரோ நாடுகள் வைத்த கடுமையான நிபந்தனைகளை உடனடியாக நிராகரித்தனர். ஆனால் மாற்று என்பது கிரீஸைப் பொறுத்தவரை ஒன்றுமில்லை என்பதே உண்மை.
ஏற்கெனவே 2 முறை கடன் வழங்கியதில் 240 பில்லியன் யூரோக்கள் பெற்றது கிரீஸ், ஆனால் கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி கிரீஸ் பணவிழுங்கி நாடாக உள்ளது என்று கூறி இனி உதவி கூடாது என்ற நிலைப்பாடு எடுத்துள்ளது.
எனவே யூரோ மண்டலத்திலிருந்து கிரீஸை வெளியேற்றுவதும், ஐரோப்பிய யூனியனிலிருந்தே கிரீஸை வெளியேற்றும் சாத்தியமும் 50:50 இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கிரீஸ் யூரோ பயன்பாட்டை தக்க வைக்க நினைக்கிறது.
இதனையடுத்து கார்ப்ரேட் வரி, ஆடம்பர பொருட்கள் மீதான வரி, கப்பல் துறையில் வரி அதிகரிப்பு என்று தனது முன்மொழிவில் குறிப்பிட்டுள்ளது, மேலும் வரி ஏய்ப்பு மீதான கடும் நடவடிக்கைகளையும் தெரிவித்துள்ளது கிரீஸ். அக்டோபருக்குள் இந்த சீர்திருத்தங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டேயாக வேண்டும்.
கிரீஸ் 350 பில்லியன் டாலர்கள் கடனில் உள்ளது. வரும் ஞாயிறன்று கிரீஸின் ‘தலைவிதி’ தீர்மானிக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT