Published : 24 Jul 2015 12:35 PM
Last Updated : 24 Jul 2015 12:35 PM
அமெரிக்காவின் லூசியானா மாகாண திரையரங்கில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள லஃபாயேத் நகரில் 'கிராண்ட் 16' திரையரங்கத்தில் நேற்றிரவு 7.30 மணியளவில் 'டிரெய்ன் ரெக்' என்ற ஹாலிவுட் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது.
அரங்கில் நூற்றுக்கும் அதிகமான ரசிகர்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் ஒருவர் திடீரென எழுந்து மற்றவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் லூசியானாவின் லபயேட் நகர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக, உள்ளூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். அவரது வயது 50 என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் லூசியானா மாகாண ஆளுநர் பாபி ஜிண்டால், கிராண்ட் தியேட்டர் அமைந்துள்ள பகுதிக்கு விரைந்தார். இந்த கொலைவெறித் தாக்குதல் சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
'டிரெய்ன் ரெக்' திரைப்படத்தில் நடித்துள்ள ஏமி ஷ்யூமர் இந்தச் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "இதை கேட்டவுடன் எனது இதயமே உடைந்துவிட்டது. லூசியானாவில் இருக்கும் அனைவருக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT