Last Updated : 20 Jul, 2015 04:04 PM

 

Published : 20 Jul 2015 04:04 PM
Last Updated : 20 Jul 2015 04:04 PM

பொம்மை தலையை வெட்டவைத்து குழந்தைகளுக்கு ஐ.எஸ். பயிற்சி

''நூற்றுக்கணக்கான குழந்தைகள் அணிவகுப்பில் நிற்கவைக்கப்படுகின்றனர். ஒரு கையில், பொம்மையுடனும் மற்றொரு கையில் போர் வாளுடனும் நிற்கும் அவர்களிடம் பொம்மையின் தலையை வெட்ட சொல்லித் தரப்படுகிறது. இதுவே ஐ.எஸ் பயங்கரவாதிகளின் அடுத்தகட்ட பயிற்சி முறையாக உள்ளது" என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இராக் மற்றும் சிரியாவில் ஆக்கிரமித்து போர் நடத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கிருக்கும் யாஷிதி பிரிவு பழங்குடியின குழந்தைகளை கடத்தி அவர்களுக்கு பயிற்சி அளித்து போராளிகளாக மாற்றி வருகின்றனர். வட இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அட்டூழியம் குறித்து 'தி அசோசியேடட் பிரஸ்' செய்தி சேகரிக்கும் போது அங்குள்ள மக்கள் அளித்த அதிர்ச்சித் தகவலில் இதுவும் ஒன்று.

யாஷிதி பரிவு இனத்தைச் சேர்ந்த பெண்கள், பாலியல் அடிமைகளாக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது குழந்தைகளை அடுத்த தலைமுறை பயங்கரவாதிகளாக்கும் பயங்கர பயிற்சிகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தி வருவதாக ஏ. பி. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ். பயங்கரவாத பயிற்சி குழுவில் இடம்பெற்று அங்கிருந்து தப்பித்து தனது குடும்பத்துடன் வந்து இணைந்த யாஹியா என்ற 14 வயது சிறுவன், தனக்கு அளிக்கப்பட்ட பயிற்சி குறித்து கூறும்போது, "அவர்கள் எனக்கு போர் வாளை ஏந்த பயிற்சி அளித்தார்கள். அடிக்க கற்றுக் கொடுத்தனர். எதிரே இருப்பவர்கள் தகாதவர்கள் என்று நினைக்கும்படி அறிவுறுத்தினர். இது போல, அணிவகுப்பில் நின்று பொம்மைகளின் தலையை குறி வைத்து வெட்டும்படி கூறுவார்கள். சரியாக வெட்டவில்லை என்றால், இரண்டாவது அல்லது மூன்றாவது முறை வாய்ப்பு அளிப்பார்கள்"

இராக்கில் தங்களது கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் வாழும் பழங்குடியின குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை அளித்து மூளைச் சலவை செய்து குழுக்களுக்குள் இழுக்கும் முயற்சியை ஐ.எஸ். பயங்கரவாதிகள் செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள், குழந்தைகள் போராளிகளாக செயல்படும் வீடியோக்களை வெளியிட்டனர். படுகொலை பயிற்சியில் ஈடுபட்ட குழந்தைகள் அனைவருமே 13 அல்லது 14 வயதுக்கு உட்பட்டவர்களாகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x