Published : 02 May 2014 07:13 PM
Last Updated : 02 May 2014 07:13 PM

தென்கொரியாவில் ரயில்கள் மோதி விபத்து: 170 பேர் காயம்

தென்கொரிய தலைநகர் சியோலில், சுரங்க ரயில் பாதையில் நின்றுகொண்டிருந்த ரயில் மீது மற்றொரு ரயில் மோதியதில், பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 3.30 மணி அளவில் சியோலின் கிழக்குப் பகுதியில் உள்ள சங்வாங்சிம்னி ரயில் நிலையத்தில், இயந்திர கோளாறு காரணமாக ஒரு ரயில் நின்றுகொண்டிருந்தது. அப்போது, பின்னால் இருந்து வந்த மற்றொரு பயணிகள் ரயில் அதிவேகத்தில் பயங்கரமாக மோதியது.

இதனால் தடம் புரண்ட ரயிலிருந்து பொதுமக்கள் கீழே குதித்து தண்டவாளம் வழியாக தப்பினர். மேலும், விபத்தில் சிக்கிய நுற்றுக்கணக்கானோரை தீயணைப்புதுறையினர் மீட்டனர். அவர்களுக்கு உதவியாக 10 ஆம்புலன்ஸ்கள் உதவியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக சியோல் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த 170-க்கும் மேற்பட்டோர், ஹங்யாங் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள தென்கொரிய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2 வாரத்திற்கு முன்பு, தென்கொரிய பயணிகள் கப்பல் கவிழ்ந்ததில் 170 பள்ளி மாணவர்கள் உட்பட 300 பேர் கடலில் மூழ்கி பலியான நிலையில், இன்று நிகழ்ந்த ரயில் விபத்து, அந்த நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x