Published : 12 Jun 2015 08:21 PM
Last Updated : 12 Jun 2015 08:21 PM
ஜிம்பாப்வே நாட்டில் புழங்கி வரும் அந்நாட்டு பணமான டாலர் மதிப்பு அடிமட்டத்துக்குச் சென்றுவிட்டதையடுத்து அதற்கு பதிலாக அமெரிக்க டாலர்களை பரிமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதாவது பயனற்ற தங்கள் டாலரை முற்றிலும் ஒழிக்க அதிபர் ராபர்ட் முகாபே முடிவெடுத்து விட்டார்.
இதனையடுத்து 175 குவாட்ரிலியன் ஜிம்பாப்வே டாலர்கள் உள்ள வங்கிக் கணக்குகளுக்கு அமெரிக்காவின் 5 டாலர் தொகை வழங்கப்படுகிறது. இந்த நடைமுறைகளின் படி பயனற்ற, மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்த ஜிம்பாப்வே டாலர்கள் முழுதும் சட்ட ரீதியாக செப்டம்பரில் முடிவுக்கு வரும்.
2008-ம் ஆண்டில் ஜிம்பாப்வே நாட்டின் பணவீக்கம் 500பில்லியன் சதவீதமாக சென்ற போது அந்த நாட்டு டாலர் பயன், பரிமாற்ற மதிப்புகளை இழந்து கவைக்குதவாத வெறும் காகிதமாக தேய்ந்தது. இதனையடுத்த் 2009-ம் ஆண்டு அமெரிக்க டாலர் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ரேண்ட் ஆகியவை புழக்கத்துக்கு வந்தது.
2008-ம் ஆண்டு நாட்டின் விலைவாசி நாளொன்றுக்கு 2 முறை உயர்ந்ததால் மக்கள் ரொட்டி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கவே பெரிய சாக்குப்பைகளில் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அந்த சமயத்தில் (2008) அதிகபட்சம் 100 டிரில்லியன் கரன்ஸியை ஜிம்பாப்வே அரசு அச்சடித்தது. வரும் திங்கள் கிழமை முதல் வங்கியில் இருக்கும் ஜிம்பாப்வே டாலரை அமெரிக்கா டாலராக மாற்றிக்கொள்ளுமாறு பொதுமக்களை மத்திய வங்கி அறிவுறுத்தி இருக்கிறது. இதற்கு செப்டம்வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 175 quadrillion ஜிம்பாப்வே டாலர் இருக்கும் பட்சத்தில் அதை மாற்றிக்கொண்டு ஐந்து அமெரிக்கா டாலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று ஜிம்பாப்வே மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.
175 ஆயிரம் மில்லியன் மில்லியன் ஜிம்பாப்வே டாலர்களுக்கும் மேல் வைத்திருப்பவர்கள் 35,000 மில்லியன் மில்லியன் ஜிம்பாப்வே டாலர்களுக்கு நிகராக 1 அமெரிக்க டாலரைப் பெறலாம். அதாவது ஒரு அமெரிக்க டாலர் பெற 35,000,000,000,000,000 ஜிம்பாப்வே டாலர்கள் தேவைப்படும்.
ஒருவர் 100 டிரில்லியன் ஜிம்பாப்வே டாலர்கள் வைத்திருந்தால் 40 செண்ட்கள் கிடைக்கும்.
கையில் வைத்திருக்கும் எந்த நாட்டு கரன்சியையும் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும் என்று மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT