Published : 08 May 2014 10:00 AM
Last Updated : 08 May 2014 10:00 AM
பிரச்சினைக்குரிய தென்சீன கடல் பகுதியில் நிறுவப்பட்டுள்ள எண்ணெய் துரப்பண மேடையை அங்கிருந்து அப்புறப்படுத்தாவிட்டால், தங்கள் நாட்டின் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனாவுக்கு வியட்நாம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வியட்நாம் அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிரச்சினைக்குரிய பகுதியில் ரூ.6,200 கோடி மதிப்பிலான எண்ணெய் துரப்பண மேடையை சீனா நிறுவி உள்ளது. அதனுடன் ராணுவ கப்பலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நமது வெளியுறவுத் துறை அமைச்சர் பாம் பின் மின் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் யாங் ஜீச்சியை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அப்போது, சீனாவின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் வியட்நாமின் இறையாண்மையை மீறும் செயல் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த இடத்திலிருந்து எண்ணெய் துரப்பண மேடையை உடனடியாக அகற்று மாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வியட்நாம் விரும்புகிறது. அதே நேரம், நாட்டின் நலனைப் பாதுகாக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தங்களுடைய கடல் பகுதியில்தான் எண்ணெய் துரப்பண மேடையை நிறுவி உள்ளோம் என சீனா தெரிவித்துள்ளது.
தென்சீன கடல்பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் உள்ள ஒரு பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், வியட்நாம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட சில சிறிய நாடுகளும் இந்தப் பகுதியை சொந்தம் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், சீனா தனது உரிமையை நிலைநாட்டும் வகையில் பிரச்சினைக்குரிய அந்த கடல் பகுதியில் எண்ணெய் துரப்பண மேடையை நிறுத்தி வைத்துள்ளது. ராணுவம் மற்றும் பொருளாதாரத்தில் சீனா மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் நிலையில், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இதுபோன்ற செயலில் சீனா ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையே சீனாவின் செல் வாக்கை கட்டுப்படுத்தும் வகையில் தனது ராணுவ மற்றும் பொருளாதார பலத்தை ஆசியாவில் நிறுவ திட்டமிட்டு வரும் அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட சிறிய நாடுகளின் அச்சத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT