Last Updated : 18 Jun, 2015 11:52 AM

 

Published : 18 Jun 2015 11:52 AM
Last Updated : 18 Jun 2015 11:52 AM

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள தேவாலயத்தினுள் புகுந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியாகினர்.

இனவெறி காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தெற்கு கரோலினாவில் ஆப்பிரிக்க மற்றும் அமெரிக்க கிறிஸ்தவர்கள் வழிபாடு மேற்கொள்ளும் பழமை வாய்ந்த தேவாலயம் உள்ளது. இங்கு புதன்கிழமை பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதனால் பதற்றமடைந்த பொதுமக்கள் சாலையில் ஓடத் தொடங்கினர்.

அமைதியை ஏற்படுத்த சார்லெஸ்டன் பகுதி பாதிரியார்கள் ஒன்று கூடி சாலைகளில் பிரார்த்தனை செய்ய தொடங்கினர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 9 பேர் பலியாகினர். மேலும், காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தாக்குதல் நடத்திய நபர் குறித்த மர்மம் நீடிக்கிறது. இது குறித்து சார்லெஸ்டன் தலைமை போலீஸ் அதிகாரி கூறும்போது, "தேவாலயம் உள்ளே நுழைந்த நபரின் வயது 20-க்கும் குறைவானதாக கருதப்படுகிறது. வேறு எதுவும் யூகிக்க முடியவில்லை, நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இங்கு இருப்பவர்கள் மீளவில்லை.

ஆனால், நிச்சயம் வெறுப்புணர்ச்சியின் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலாகவே இது இருக்கக்கூடும். நாங்கள் குற்றவாளியை நிச்சயம் தண்டனை அளிக்க செய்வோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x