Published : 02 Jun 2015 03:18 PM
Last Updated : 02 Jun 2015 03:18 PM
ஆப்கானில் 2001-ம் ஆண்டு அமெரிக்கப் படைகள் ஆக்ரமிப்பு செய்ததையடுத்து நடந்த போர், தாலிபான் தீவிரவாத எழுச்சி ஆகியவற்றுக்கு சுமார் 100,000 பேர் பலியாகியிருப்பதாக பிரவுன் பல்கலைக் கழகத்தின் புதிய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
பிரவுன் பல்கலைக் கழகத்தின் பன்னாட்டு ஆய்வுப் பிரிவான வாட்சன் இன்ஸ்டிட்யூட் வெளியிட்டுள்ள 'போரின் விலைகள்' (Costs of war) என்ற அறிக்கையில், ஆப்கானில் 2001-ம் ஆண்டு முதல் நடந்த போர்களில் பலியானோர், காயமடைந்தோர், காணாமல் போனவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோர் பற்றிய ஆய்வை நடத்தியது.
சிவிலியன் மற்றும் ராணுவ உயிரிழப்புகள் இருநாடுகளுக்கும் சேர்த்து 1,49,000 என்றும் சுமார் 1,62,000 பேர் காயமடைந்தோர் எண்ணிக்கை என்றும் தெரிவித்துள்ளது.
"ஆப்கானில் போர் நின்று விடவில்லை. இன்னும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது" என்று இந்த அறிக்கையின் ஆசிரியர் நேதா கிராஃபர்ட் தெரிவித்தார்.
உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கையில் இருக்கும் துல்லியம் அளவுக்கு, பலியான அப்பாவி மக்கள் எண்ணிக்கையில் தெளிவு இல்லை என்கிறார் அவர்.
ஆப்கானில் உள்ள ஐ.நா.உதவிக்குழுவின் புள்ளிவிவரங்களோடு, பிற ஆதாரங்களின் அடிப்படையிலும் இந்த எண்ணிக்கையை இந்த அறிக்கை வந்தடைந்துள்ளது.
2007-ம் ஆண்டுதான் அப்பாவி மக்கள் அதிகமான அளவுக்கு பலியாகியுள்ளனர். தீவிரவாதிகள் தாக்குதல் உட்பட பலியான அப்பாவிகளின் எண்ணிக்கை அந்த ஆண்டில் மட்டும் 17,700 என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
போரின் நேரடி விளைவினால் 26,270 ஆப்கானியர்கள் பலியாகியுள்ளனர், சுமார் 29,900 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்றும் ஆப்கானில் தீவிரவாதத்தினால் அப்பாவி பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வருவதாகவே இந்த அறிக்கை கூறியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT