Last Updated : 19 Jun, 2015 03:46 PM

 

Published : 19 Jun 2015 03:46 PM
Last Updated : 19 Jun 2015 03:46 PM

ஆப்கானில் குரானை எரித்ததாக கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பம் அனுபவிக்கும் துயரங்கள்

காபூலைச் சேர்ந்த 27 வயது பெண் பர்குந்தா. இவர் கடந்த மார்ச் 19-ம் தேதி குரானை எரித்ததாகக் கூறப்பட்ட தவறான தகவலையடுத்து கொடூரமாக கொல்லப்பட்டார். தற்போது இந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

காபூலைச் சேர்ந்த 27 வயது பெண் பர்குந்தா. இவர் கடந்த 19-ம் தேதி காபூலின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஷா-டோ ஷாம்சிரா மசூதிக்குச் சென்றார். மசூதி வளாகத்தில் இவர் புனித நூலான குரானின் சில பக்கங்களை எரித்ததாக சிலர் கோஷ மிட்டனர்.

இந்தத் தகவல் தீயாகப் பரவி ஒரு சில நிமிடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மசூதி வளாகத்தில் கூடிவிட்டனர். அங்கிருந்த சில போலீஸார், பாதுகாவலர்கள் மசூதியின் வாயிற்கதவுகளை மூடி பர்குந்தாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால் நூற்றுக்கணக்கானோர் சுவரில் ஏறி குதித்து மசூதி வளாகத்துக்குள் புகுந்தனர்.

என்ன நடந்தது என்பது குறித்து எதுவுமே விசாரிக்காமல் அந்தப் பெண்ணை தரையோடு தரையாக இழுத்து வந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். சிலர் காலால் எட்டி உதைத்தனர், கற்களை வீசியெறிந்தனர், கம்புகளால் சரமாரியாக அடித்தனர். கூரையிலிருந்து அவரைத் தூக்கி எறிந்து, அவர் மீது காரை ஏற்றி கான்க்ரீட்டினால் அவரை சிதைத்து அந்தக் கும்பல் கொலைவெறியாட்டம் போட்டது. பிறகு பின்னர் காபூல் ஆற்றங்கரைக்கு உடலை எடுத்துச் சென்று தீ வைத்து கொளுத்தினர். இதை ஆயிரக்கணக்கானோர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் வந்து பாதி எரிந்த நிலையில் பர்குந்தாவின் உடலை மீட்டனர்.

உலகை உலுக்கிய இந்த கொடூரமான கொலையை அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இன்றும் நிம்மதியாக அங்கு வாழ முடியவில்லை. “வாழ்க்கை முற்றிலும் நின்றே போனது” என்று அவரது தந்தையான 72 வயது மொகமது நாதிர் மாலிக்ஸாதா வருந்தியுள்ளார்.

வயதான பெற்றோர், அவரது 7 சகோதரிகள், 2 சகோதரர்கள், இவர்களது மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோரை முற்றிலும் காபூல் சமூகம் புறக்கணித்து வருகிறது. கொலையுண்ட பர்குந்தாவின் பெயரை கூறிக்கொண்டு சுயநலமாகச் செயல்படுவோர் தங்கள் குடும்பத்தினரை கண்டும் காணாமல் செல்கின்றனர் என்றும் வெளியே தலைகாட்டினால் ஏளனமும், அவமானமுமே மிஞ்சுகிறது என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கொலைசெய்த கும்பலில் சிலர் விடுதலை செய்யப்பட்டதையடுத்து, குடும்பத்தினர் தாக்கப்படலாம் என்பதால் வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளனர். “குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாது போனால் என்ன ஆகும், அவர்கள் படிப்பறிவில்லாதவர்களாக வாழ வேண்டுமா? என்று பர்குந்தாவின் 37 வயது சகோதரர் நஜிபுல்லா பர்குந்தா வருத்தத்துடன் கேட்கிறார்.

பர்குந்தாவின் தாயார், பீபி ஹஜிரா கூறும் போது, “எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆனால் எங்களிடம் அதிகாரமோ, பணபலமோ இல்லை அவர்களை எதிர்த்து போராடுவதற்கு” என்றார்.

பர்குந்தா கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, 18 பேர் போதிய சாட்சியம் இல்லாததையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர், மேலும் 8 பேருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 11 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கிடையில் தண்டனை பெற்ற 37 பேரின் மேல்முறையீடு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் பெண்ணை இழந்த குடும்பமோ, “நாங்கள் சாப்பிடுவதில்லை, உறங்குவதில்லை, எப்போதும் பர்குந்தாவின் நினைவு எங்களை வாட்டுகிறது. எங்களால் இனி சாப்பிடவே முடியாது, நாங்கள் அழுது கொண்டிருக்கிறொம்” என்று கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x