Last Updated : 27 Jun, 2015 10:54 AM

 

Published : 27 Jun 2015 10:54 AM
Last Updated : 27 Jun 2015 10:54 AM

கொலம்பியா விமான விபத்தில் தப்பி வனப்பகுதியில் மாயமான தாய், குழந்தை 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

கொலம்பியாவின் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விமான விபத்தின்போது காணாமல் போன தாயும் அவரது குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரையும் ஹெலி காப்டர் மூலம் மீட்ட அந்நாட்டு விமானப்படை வீரர்கள் மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட கொலம்பியா விமானப்படையின் கமாண்டர் கர்னர் ஹெக்டர் கர்ரஸ்கால் இதுகுறித்து கூறும்போது, “மிகவும் பரந்த வனப்பகுதியில் நடந்த இந்த விமான விபத்தில் தாயும் அவரது குழந்தையும் உயிர் தப்பி இருப்பது அதிசயமான நிகழ்வு. அந்தப் பெண்ணின் மன உறுதியே குழந்தை உயிருடன் இருந்ததற்குக் காரணம்” என்றார்.

கடந்த சனிக்கிழமை கொலம்பியாவின் நுக்வி நகரிலிருந்து க்விப்டோ நகருக்கு சென்றுகொண்டிருந்த செஸ்னா 303 விமானம், அடர்ந்த வனப்பகுதிக்கு மேல் பறந்தபோது வெடித்துச் சிதறியது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீட்புக் குழுவினர், அந்த விமானத்தின் பைலட் கேப்டன் கார்லோஸ் மரியோ செபல்லோஸின் சடலத்தை மீட்டனர்.

மேலும் விமானத்தின் கதவு திறந்திருந்ததால் அதில் பயணம் செய்தவர்கள் வெளியே குதித்திருக்கலாம் என்று கருதி, 14 பேர் கொண்ட குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், விபத்து நடந்த பகுதிக்கு அருகே, நெல்லி முரில்லோ (18) என்ற பெண்ணும் அவரது ஒரு வயதுகூட பூர்த்தியாகாத மகன் யுடியர் மொரெனோ ஆகிய இருவரும் உயிருடன் இருந்ததைக் கண்டு அவர்களை மீட்டனர்.

கொலம்பியாவின் வடமேற்கில் போக்குவரத்து வசதி குறைவான பகுதியில் இந்த விமானம் டாக்சி சேவையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x