Published : 14 May 2015 12:50 PM
Last Updated : 14 May 2015 12:50 PM
ஆப்கானில் விருந்தினர் மாளிகை உணவகத்தினுள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் 4 இந்தியர்கள் மற்றும் ஒர் அமெரிக்கர் உள்பட 14 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விருந்தினர் மாளிகைக்குள் நேற்று (புதன்கிழமை) இரவு நுழைந்த 3 பயங்கரவாதிகள் அங்கிருந்த வெளிநாட்டவர்களை குறிவைத்து சுட ஆரம்பித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவுடன், ஆப்கான் பாதுகாப்புப் படையினர், சிறப்பு காவல்படையினர் விரைந்து வந்து விருந்தினர் மாளிகையை சுற்றி வளைத்தனர். இதனால் உணவகத்தில் இருந்த வெளிநாட்டவர்களை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.
இருதரப்புக்கும் இடையே 7 மணி நேரத்துக்கும் மேலும் சண்டை நீடித்தது. பின்னர் அறைகளுக்குள் இருந்த 54 பேரை போலீஸார் பத்திரமாக மீட்டு வெளியேற்றினர். பயங்கரவாதிகள் சுட்டதில் உணவகத்தில் தங்கி இருந்த 14 பேர் பலியானதாக காபூல் காவல்துறை தலைமை அதிகாரி அப்துல் ரகுமான் ரகீமி தெரிவித்தார். இதில், 4 இந்தியர்கள் மற்றும் ஒரு அமெரிக்கரும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல மணி நேர போராட்டத்துக்கு இன்று (வியாழக்கிழமை) காலையில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே, இந்தியர்கள் கொல்லப்பட்டதை பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அமர் சிங்ஹா உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் விவரங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை.
இந்தத் தாக்குதலுக்கு தாலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
பிரதமர் மோடி இரங்கல்
காபூல் விருந்தினர் மாளிகை தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். ஆப்கான் அதிபர் அஷரஃப் கனியை தொடர்பு கொண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT