Published : 04 May 2015 03:53 PM
Last Updated : 04 May 2015 03:53 PM
தங்கள் நாட்டின் கிராமப்புறங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை எனில், வெளிநாட்டுக் குழுக்களின் மேலதிக உதவிகள் தேவையில்லை என்ற முக்கிய நிலைப்பாட்டை நேபாள அரசு எடுத்துள்ளது.
காத்மாண்டு உள்ளிட்ட முக்கிய நகர்ப் பகுதிகளில் மீட்பு பணிகள் முடிவடைந்து விட்டதால், எஞ்சியுள்ள நடவடிக்கைகளை தமது அரசே செய்துவிடும் என்று நேபாளத்தின் பேரிடர் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிட இருப்பதாக நேபாள உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லஷ்மி பிரசாத் தக்கல் தெரிவித்தார்.
நேபாளத்தின் நகர்ப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டும் வெளிநாட்டுக் குழுவினர், சாலை வசதிகள் சரிவர இல்லாத கிராமப்பகுதிகளில் போதுமான மீட்புப் பணிகளில் ஈடுபட தயங்குகின்றன என்பது நேபாள தரப்பு முன்வைக்கும் அதிருப்தி ஆகும்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி 7.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, அந்த நாட்டையே புரட்டிப் போட்டது. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7000-ஐ எட்டியுள்ளது.
மீட்புப் பணிகளில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், இலங்கை, துருக்கி, பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மன், இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளைச் சேர்ந்த மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தின் 1,140 சிறப்பு மீட்பு குழிவினர், 240 போலீஸார், 700 ஆயுதம் ஏந்திய காவற்படை மற்றும் அரசு ஊழியர்களும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், நகர்ப்புறங்களில் மீட்பு பணிகள் முடிந்துவிட்டதால், வெளிநாட்டைச் சேர்ந்த மீட்பு குழுவினர் கிராமங்களில் சென்று பணிகளை மேற்கொள்ளலாம் அல்லது வெளியேறலாம் என்றும், மற்ற மீட்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளூர் குழுக்களே போதுமானது என்றும் நேபாளத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நிலநடுக்கத்தில் நிலைகுலைந்துபோன நேபாளத்தில் செய்தி சேகரிக்கும் இந்திய செய்தி ஊடகங்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
மீட்புப் பணிகளை இந்திய ஊடகங்கள் உணர்வற்று, எதிர்மறை உளவியல் அணுகுமுறையுடன் செய்திகளை வெளியிட்டு பரபரப்பாக்கியதாக நேபாள அளவில் ட்விட்டரில் கருத்துக்கள் குவிந்தது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT