Last Updated : 06 May, 2015 06:55 PM

 

Published : 06 May 2015 06:55 PM
Last Updated : 06 May 2015 06:55 PM

பிரபஞ்சத்தில் மிகவும் தொலைவான கேலக்ஸி கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் மிகவும் தொலைவில் உள்ள கேலக்ஸி (விண்மீன் கூட்டம்) ஒன்றை விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பூமியில் இருந்து 13.1 பில்லியன் (சுமார் 1,300 கோடி) ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.ஜி.எஸ்.-இசட்.எஸ்.8-1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கேலக்ஸியை நாசாவின் ஹப்பிள் மற்றும் ஸ்பிட்சர் தொலைநோக்கிதான் முதன்முதலில் கண்டுபிடித்தது.

தற்போது அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும், கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் இணைந்து டபிள்யு.எம்.கெக் அப்சர்வேட்டரி எனும் ஆய்வு மையத்தில் உள்ள 10 மீட்டர் விட்டம் கொண்ட தொலைநோக்கி மூலம் அந்த கேலக்ஸி பூமியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை துல்லியமாகக் கணித்திருக்கின்றன.

அவர்கள் அளித்த தகவல்படி, இந்த விண்மீன் கூட்டம் பூமியில் இருந்து சுமார் 1,300 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

இதுகுறித்து யேல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பாஸ்கல் ஓசெக் கூறும்போது, "பிரபஞ்சம் உருவாகி 67 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த விண்மீன் கூட்டம் தோன்றியிருக்க வேண்டும். இதன் மூலம் ஆதியிலிருந்தே கேலக்ஸிக்கள் இருக்கின்றன, ஆனால் அவை இப்போதிருக்கும் இயல்பு நிலையைக் காட்டிலும் முன்பு வேறு மாதிரியான இயல்புகளைக் கொண்டிருந்தன என்பது தெரியவருகிறது" என்றார்.

இந்தக் கண்டுபிடிப்பு பற்றிய விவரங்கள் அமெரிக்க இதழான ‘தி டிஸ்கவரி’-இல் வெளியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x