Published : 13 May 2015 11:00 AM
Last Updated : 13 May 2015 11:00 AM
தனது நிறுவனத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றும் 6,400 ஊழியர்களுடன் சீன கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அந்த ஊழியர்கள் அனைவரையும் தனது சொந்த செலவில் பிரான்ஸுக்குக் கூட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் உள்ளது 'தியென்ஸ்' எனும் வணிகக் குழுமம். இந்த நிறுவனம் தனது 20வது ஆண்டு விழாவை சமீபத்தில் கொண்டாடியது. அதனை கொண்டாடும் வகையில், அதன் முதன்மை செயல் அலுவலர் லீ ஜின்யுவான் புதிய உலக சாதனை ஒன்றைப் படைக்க முடிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, தனது நிறுவனத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றும் 6,400 ஊழியர்களைத் தேர்வு செய்து, அவர்கள் அனைவரையும் தன் சொந்த செலவில் பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார். பாரிஸ் நகரத்தில் தொடங்கிய அந்தச் சுற்றுலா கோத் தசூர் எனும் இடத்தில் பேரணியுடன் கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.
அப்போது அந்த இடத்தில் உள்ள நைஸ் கடற்கரையோரம் உள்ள நடைபாதையில் அந்த ஊழியர்கள் அனைவரும் நீல நிற டி-ஷர்ட்டுகள் மற்றும் தொப்பிகள் ஆகியவற்றை அணிந்துகொண்டு ஒரே இடத்தில் திரண்டனர்.
அவர்கள் அணிந்திருந்த ஆடையில் 'கோத் தசூரில் தியென்ஸ் காணும் கனவு இனிமையாக உள்ளது' என்ற அர்த்தம் தொனிக்கும் வகையில் ஆங்கில வாக்கியம் இடம்பெற்றிருந்தது. உலகிலேயே ஒரு வாக்கியத்தை ஒரே இடத்தில் இவ்வளவு பேர் தங்கள் உடல்களில் ஏந்தியிருப்பது இதுவே முதன்முறை என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே லீ ஜின்யுவானை பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரன் ஃபேபியஸ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்தப் பயணத்துக்கான செலவு சுமார் 13 முதல் 20 மில்லியன் யூரோ (சுமார் ரூ. 94 கோடி முதல் ரூ.146 கோடி) வரை செலவாகியிருக்கும் என்று பிரெஞ்சு ஊடகங்கள் கணித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT