Last Updated : 20 May, 2015 06:16 PM

 

Published : 20 May 2015 06:16 PM
Last Updated : 20 May 2015 06:16 PM

புவி வெப்பமடைதலால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஒபாமா எச்சரிக்கை

புவி வெப்படைதல் விளைவாக ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் விவகாரமாகும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

பருவநிலை மாற்றங்கள் வறுமை, அரசியல் நிலையற்றத் தன்மைகளை உருவாக்கும் தேசப் பாதுகாப்பு சவால்களைக் கொண்டது என்கிறார் ஒபாமா.

அமெரிக்காவை முன்வைத்து ஒபாமா இதனைக் கூறினாலும், உலக அளவில் புவி வெப்பமடைதல் ஏற்படுத்தும் அழிவுகளினால் தேசங்களுக்கு ஏற்படும் சவால்களையும் குறிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனெக்டிகட், நியூலண்டனில் உள்ள அமெரிக்க கடலோர காவற்படை அகாடமியில் தொடக்கவுரை ஆற்றவிருக்கும் ஒபாமா அதில் இவ்வாறு கூறியுள்ளார்.

"தவறு செய்ய வேண்டாம். நம் நாட்டை ராணுவம் எப்படி காக்கப்போகிறது என்பதில் பருவநிலை மாற்றங்களின் விளைவுகள் தாக்கம் செலுத்தும். எனவே நாம் அதற்குரிய வகையில் செயல்படவேண்டும், இப்போதே செயல்படத் தொடங்க வேண்டும்” என்றார்.

சமீப காலங்களாக அமெரிக்க அதிபர் ஒபாமா, புவிவெப்பமடைதல் விளைவுகள் குறித்து அதிகம் கவலைப்படுபவராக இருந்து வருகிறார். பருவநிலை மாற்றங்களை அவர் சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவற்றை பாதிக்கும் பிரச்சினையாகவும், சுற்றுச்சூழல் பிரச்சினையாகவும், சர்வதேச நாடுகள் இதற்கு ஏற்ப தங்களது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது கடமை என்றும் கூறியதோடு, தனது மகள்களில் ஒருவருக்கு ஆஸ்துமா நோய் ஏற்பட்டதையும் அவர் தற்போது பருவநிலை மாற்ற விளைவுகளுடன் தொடர்பு படுத்தி உலக அளவில் சிந்திக்கத் தொடங்கியுள்ளார்.

'நமது சேவைத் திட்டங்கள் எப்படி நடைபெற வேண்டும், உள்கட்டமைப்புகள் எப்படி காக்கப்படவேண்டும், அதற்கான பயிற்சிகள் ஆகியவற்றை பருவநிலை மாற்றங்கள் தீர்மானிக்கின்றன.

நார்ஃபோல்க் பேரலைகள் ஏற்கெனவே அதன் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அலாஸ்காவில் உறைபனி நமது ராணுவ நிலைகளை சேதப்படுத்தியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் நீண்ட வறட்சி, மற்றும் காட்டுத்தீ அடிக்கடி ஏற்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், இதன் சேதங்களை தடுக்க நம் ராணுவம் எப்படி தயாராக இருக்க வேண்டும் போன்றவை பரிசீலிக்கப்பட வேண்டும்" என்று அந்த தொடக்க உரை அமைந்துள்ளது.

ஆனால், பருவநிலை மாற்றங்கள் குறித்த ஒபாமாவின் ஒற்றைப் பரிமாண பார்வை அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் என்று எதிர்கட்சிகள் விமர்சனங்களை தொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x