Last Updated : 21 May, 2015 10:44 AM

 

Published : 21 May 2015 10:44 AM
Last Updated : 21 May 2015 10:44 AM

பின்லேடன் தேடுதல் வேட்டை குறித்த ‘ஜீரோ டார்க் தர்ட்டி’ திரைப்படத்துக்கு சிஐஏ உதவியது: புலனாய்வு ஆவணப்படத்தில் அதிர்ச்சி தகவல்

அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டை குறித்த ‘ஜீரோ டார்க் தர்ட்டி’ திரைப்பட காட்சிகளுக்கு சிஐஏ அமைப்பு நேரடியாக உதவியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பி.பி.எஸ்.பிரண்ட்லைன் என்ற புலனாய்வு தொலைக்காட்சி சேனல் ஆதாரங்களுடன் புதிய ஆவணப் படத்தை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படை வீரர்கள் கடந்த 2011 மே 2-ம் தேதி சுட்டுக் கொன்றனர்.

அவரைப் பிடிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ நடத்திய தேடுதல் வேட்டைகள், கைதிகளிடம் நடத்திய கொடூர சித்ரவதை விசாரணைகள், பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகியவற்றை மையமாகக் கொண்டு 2012-ம் ஆண்டில் ‘ஜீரோ டார்க் தர்ட்டி’ என்ற திரைப்படம் வெளியானது.

ஹாலிவுட்டில் பெரும் வசூலை வாரி குவித்த அந்தப் படத்தின் இயக்குநர் கேத்ரீன் பிகலோ. பிடிபட்டவர்களிடம் உண்மைகளை வாங்க சிஐஏ நடத்தும் கொடூர சித்ரவதை விசாரணைகளை அவர் தனது படத்தில் தத்ரூபமாக சித்தரித்திருந்தார்.

படம் வெளியானபோது சிஐஏ அமைப்பும் அமெரிக்க அரசும் இயக்குநர் கேத்ரீன் பிகலோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் திரைப்பட காட்சிகளுக்கு சிஐஏ அமைப்பே நேரடியாக உதவியிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதிர்ச்சி தகவல்கள்

இதுதொடர்பாக அமெரிக்கா வின் புலனாய்வு தொலைக்காட்சி சேனலான ‘பி.பி.எஸ். பிரண்ட் லைன்’ அண்மையில் ஓர் ஆவணப் படத்தை வெளியிட்டது. ‘இன் சீக்ரெட்ஸ், பாலிடிக்ஸ் அண்ட் டார்ச்சர்’ என்ற தலைப்பிலான அந்த ஆவணப்படத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன.

பின்லேடன் போன்ற தீவிரவாதி களைப் பிடிக்க கொடூர சித்ரவதை விசாரணைகள் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்த ‘ஜீரோ டார்க் தர்ட்டி’ திரைப்படத்துக்கு சிஐஏ அமைப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியுள்ளது. இதற்காக சிஐஏவின் சில ரகசிய ஆவணங்களை அந்த அமைப்பே திரைப்பட குழுவுக்கு அளித்துள்ளது.

படப்படிப்பின்போது இயக்கு நருடன் இணைந்து சிஐஏ உளவாளிகளும் ரகசியமாகப் பணியாற்றி உள்ளனர். இதுதொடர்பாக சிஐஏ முன்னாள் செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப், செனட் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் பேட்டிகள் ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளன. பிரண்ட்லைன் சேனலின் இந்த ஆவணப் படத்தை மைக்கேல் கிர்க் தயாரித்துள்ளார். இதற்காக அவர் சிஐஏவின் சித்ரவதை கூடங்களுக்கு சென்று ரகசியமாக விசாரணை நடத்தியுள்ளார்.

செனட் குழுவினர் பேட்டி

சிஐஏவின் கொடூர சித்ரவதைகள் குறித்து செனட் புலனாய்வுக் குழு விசாரித்து செனட் அவையில் கடந்த 2014-ல் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதில் சி.ஐ.ஏ. வால் கைது செய்யப்பட்ட ஆப்கானிஸ்தான், ரஷ்ய, அரபு நாட்டவர்கள் கொடூர சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது

கைதிகளின் ஆசன வாய் வழியாக உணவு, தண்ணீர் செலுத் தியது உள்ளிட்ட பல்வேறு சித்ர வதைகளை சிஐஏ செய்திருப்பதாக செனட் புலனாய்வுக் குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தது. அந்த செனட் குழுவினரின் பேட்டிகளும் பிரண்ட்லைன் சேனல் ஆவணப் படத்தில் முக்கிய ஆதாரங்களாக இணைக்கப்பட்டுள்ளன.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x