Published : 21 Apr 2015 11:54 AM
Last Updated : 21 Apr 2015 11:54 AM
ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் இரானுக்கு எதிராக விமானம் தாங்கிய அமெரிக்க போர்க் கப்பல் புறப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏமனில் அதிபர் ஹதி ஆதரவு படைகளை எதிர்த்து இரானின் ஆதரவோடு ஷியாப் பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு அந்நாட்டில் முன்னேறி வருகின்றனர். பல நகரங்களை அவர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
இரானைத் தவிர இவர்களுக்கு ஏமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே ஆதரவு படையும் சண்டையில் ஈடுபடுகின்றனர்.
ஏமன் அரசுக்கு ஆதரவாக சன்னி பிரிவு மக்கள் அதிகம் நிறைந்த சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகளின் படைகள் போர் நடத்தி வருகின்றன.
கடந்த மாதம் 26-ஆம் தேதில் நடந்து வரும் கடுமையான போரில் இதுவரை சுமார் 700 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 3000 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அந்த நாட்டின் பெரும்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துவிட்டனர்.
போரில் நேரடியாக இறங்காத அமெரிக்கா
நிலைமையை மோசமாக்கி வரும் ஹவுத்திக்களுக்கு இரான் ஆதரவு அளிப்பதை பல நாடுகள் கண்டித்துள்ளன. அமெரிக்கா இதற்காக தொடர்ந்து இரானை எதிர்த்து வந்த நிலையில், அமெரிக்காவின் இரண்டு போர்க் கப்பல்கள் ஏமன் நாட்டை நோக்கி விரைந்து வந்துகொண்டிருப்பதாக அமெரிக்க பெண்டகன் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
சவுதி அரேபிய படைகள் நடத்தும் போருக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு நேரடி உதவியை அமெரிக்கா இதுவரை வழங்கவில்லை.
தடை செய்யப்பட்ட ஆயுதங்களை இரான் அரசு ஹவுத்தி படைகளுக்கு வழங்கி வருவதை கண்காணிக்கும் விதமாக தற்போது அமெரிக்கா தனது அதிநவீன இரண்டு போர் கப்பல்களை ஏமனுக்கு அனுப்பியுள்ளது.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் இரானை மட்டும் நேரடியாக அமெரிக்கா எதிர்க்க முற்பட்டுள்ளது.
யு.எஸ்.எஸ். தியோடர் ரூஸ்வெல்ட் என்ற அந்த அமெரிக்க போர்க் கப்பல் ஏமன் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டு, ஆயுதங்களை ஏற்றி வரும் இரான் கப்பல்களை நிறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புதுறை அதிகார் கர்னல் ஸ்டீவ் வாரன் கூறும்போது, "ஏமன் கடலை நோக்கி தியோடர் ரூஸ்வெல்ட் புறப்பட்டது. ஏடன் துறைமுகத்துக்கு நுழையும் இரான் கப்பல்களை இ கப்பல் கண்காணித்து தடுத்து நிறுத்தும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT