Last Updated : 21 Apr, 2015 03:14 PM

 

Published : 21 Apr 2015 03:14 PM
Last Updated : 21 Apr 2015 03:14 PM

மணிக்கு 603 கி.மீ. வேகத்தில் பறந்து உலக சாதனை படைத்த ஜப்பான் ரயில்

ஜப்பானின் புதிய தயாரிப்பான மேக்லவ் ரயில் மணிக்கு 603 கி.மீட்டர் வேகத்தில் பயணித்து புதிய சாதனை படைத்துள்ளது.

தற்போதைய நிலையில் சீனாவில்தான் அதிவேக மேக்லவ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அங்கு ஷாங்காய் வழித்தடத்தில் மணிக்கு 431 கி.மீட்டர் வேகத்தில் மேக்லவ் ரயில் இயக்கப்படுகிறது. அமெரிக்காவில் மணிக்கு 241 கி.மீட்டர் வேகத்தில் மட்டுமே அதிவேக ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த 2003-ம் ஆண்டில் ஜப்பானில் மணிக்கு 581 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த ரயில் வர்த்தகரீதியாக இன்னும் சேவையை தொடங்கவில்லை. சில வாரங்களுக்கு முன்பு மணிக்கு 590 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் ரயிலை ஜப்பான் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் ஜப்பானின் புதிய தயாரிப்பான மேக்லவ் என்ற அதிவேக ரயில் மணிக்கு 603 கி.மீட்டர் வேகத்தில் பறந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. காந்த விசையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து 10 செ.மீட்டர் உயரத்தில் பறக்கும். மவுண்ட் புஜி அருகே சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

வரும் 2027-ம் ஆண்டில் டோக்கியோ, நகோயோ நகரங் களுக்கு இடையே இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. இதற்காக ரயிலின் வேகத்துக்கு ஈடுகொடுக் கும் வகையில் ரூ.6000 கோடியில் ரயில் பாதை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. ஷின்கான்சென் புல்லட் ரயில் மற்றும் மேக்னக்டிக் மாதிரி அதிவேக ரயில்களை வெளிநாடுகளுக்கு விற்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார். அப்போது ஜப்பான் சார்பில் நியூயார்க், வாஷிங்டன் இடையே அதிவேக ரயில் பாதை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவின் புல்லட் ரயில் திட்டத்துக்கு உதவி செய்ய ஜப்பான் ஏற்கெனவே உறுதியளித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x