Last Updated : 28 Apr, 2015 03:26 PM

 

Published : 28 Apr 2015 03:26 PM
Last Updated : 28 Apr 2015 03:26 PM

பூகம்ப தாக்கம்: 3 மீட்டர்கள் நகர்ந்த காத்மாண்டு; எவரெஸ்ட் உயரத்தில் மாற்றமில்லை

நேபாளத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தின் எதிரொலியாக தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பெரும்பாறைகள் தெற்கு நோக்கி பல மீட்டர்கள் இடம்பெயர்ந்துள்ளன. ஆனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாறுதல் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக டெக்டானிக் ஆய்வியல் நிபுணர் ஜேம்ஸ் ஜாக்சன் கூறும்போது, “பூகம்பத்துக்குப் பிறகான பூமியின் ஊடாக சென்ற ஒலி அலைகளின் தரவுகளின் படி தலைநகர் காத்மாண்டுவுக்கு கீழுள்ள பூமியின் பாறை 3 மீட்டர்கள் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இது மிகப்பெரிய இடப்பெயர்வு” என்று கூறினார்.

இந்தியாவைச் சுமக்கும் கண்டத்தட்டு, ஐரோப்பா, ஆசியாவை தாங்கும் கண்டத்தட்டை நோக்கி ஆண்டுக்கு 2 செமீ நகர்கிறது. தற்போது பூகம்பம் ஏற்பட்ட ஃபால்ட் இந்த இரண்டு கண்டத்தட்டுகளுக்கு இடையே உள்ளது.

டர்ஹாம் பல்கலைக்கழக புவி அறிவியல் துறையைச் சேர்ந்த மார்க் ஆலன் என்பவர் கூறும்போது, “இரண்டு கண்டத்தட்டுகளுக்கு இடையே இருக்கும் ஃபால்ட் தெற்கு நோக்கி நகர்ந்தது. இதனால் பூமியின் கடினமான மேற்பகுதி தேய்மானம் கண்டுள்ளது. புரியும்படியாகக் கூறவேண்டுமென்றால் காத்மாண்டு 3 மீட்டர்கள் இடப்பெயர்வு கண்டுள்ளது.

ஃபால்ட் லைனுக்கு மேல் எவரெஸ்ட் சிகரம் இல்லாததால் இவ்வளவு பலமான இடப்பெயர்வு இருந்தும் அதன் உயரத்தில் மாறுதல் ஏற்படாது” என்று கூறினார்.

ஆனால் மற்றொரு நிபுணரான எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் இயன் மெயின் கூறுகையில், "எவரெஸ்ட் உயரத்தில் சிறு மாறுதல்கள் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் அதனை இப்போதைக்கு நாம் கண்டறிய முடியாது. ராடார் தகவல்களைக் கொண்டே எவரெஸ்ட் உயரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கணக்கிட முடியும்" என்கிறார்.

அவர் மேலும் கூறும்போது, “பூகம்பம் காரணமாக பாறைகள் பூமிக்கு அடியில் இடப்பெயர்வு கண்டுள்ளதால் இதே ஃபால்ட்டில் அல்லது இதற்கு அருகில் உள்ள மற்ற ஃபால்ட்களில் அழுத்தம் அதிகரிக்கலாம், இதனால் இவையும் பிளவுகளைச் சந்திக்கலாம்.

இதனால் சிலமாதங்களுக்கு நிலநடுக்கங்கள் இப்பகுதியில் நீடிக்க வாய்ப்புள்ளது" என்று எச்சரித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x