Published : 11 Apr 2015 10:48 AM
Last Updated : 11 Apr 2015 10:48 AM
இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் விமானத்தின் முன் சக்கர பகுதியில் (லேண்டிங் கியர்) மறைந்து கொண்டு பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். சாகசம் செய்ய வேண்டுமென்ற ஆர்வத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இருந்து தலைநகர் ஜகார்த் தாவுக்கு நேற்று சரக்கு விமானம் ஒன்று வந்தது. அது தரையிறங்கிய பிறகு அதன் முன் சக்கர பகுதியில் இருந்து ஒரு இளைஞர் வெளியே வந்தார். இதைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
அவரைப் பிடித்து விசாரித்த போது அவரது பெயர் மரியோ ஸ்டீவ் அப்ரிடா(21) என்பது தெரிய வந்தது. விமானம் சுமத்ராவில் கிளம்புவதற்கு முன்பு முன் சக்கர பகுதியில் சென்று மறைந்து கொண்டுள்ளார். விமானங்களில் பொதுவாக தரையிறக்கும்போது சக்கரம் வெளியே வரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த இளைஞர் விமானத்தின் முன் சக்கரம் உள்பகுதியில் புகுந்து மறைந்திருந்துள்ளார்.
விமானம் சுமார் 2 மணி நேரம் வானத்தில் பறந்துள்ளது. மேலும் 34 ஆயிரம் அடி உயரம் வரை சென்றதால் அப்போது அவருக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதும் சிரமமாக இருந்திருக்கும். வெப்ப நிலை மைனஸில் இருந்ததால், கடும் குளிர் காரணமாகவும் அவர் மரணமடைந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் தாக்குப் பிடித்து அந்த இளைஞர் உயிருடன் தரையிறங்கிவிட்டார்.
விமானத்தில் இருந்து இறங்கி யபோது அவரது காதில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தை விபத்துக்குள் ளாக்க முயற்சித்தது உள்ளிட்ட பல பிரிவுகளில் அந்த இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT