Published : 16 Apr 2015 11:09 AM
Last Updated : 16 Apr 2015 11:09 AM
அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பொருட்களைக் கொண்டு சென்ற ராக்கெட்டை பாதுகாப்பாகத் தரையிறக்கும் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத் தில் உள்ள விஞ்ஞானிகளுக்கு தேவையான உணவு, உடை மற்றும் தானியங்கி தேநீர் கருவி உட்பட பல பொருட்களை அவ்வப்போது பூமியில் இருந்து அனுப்பி வைப்பது வழக்கம்.
இந்த பொருட்கள் அடங்கிய விண்கலத்தை சுமந்து செல்ல 'பூஸ்டர் ராக்கெட்டு'கள் பயன் படுத்தப்படுவதுண்டு. விண் கலத்தை சர்வதே விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பாதையில் கொண்டு செல்வதோடு அந்த பூஸ்டர் ராக்கெட்டுகளின் வேலை முடிந்துவிடும். பிறகு, அவை வானிலேயே வெடித்துச் சிதறிவிடும். அல்லது கடலுக்குள் விழுந்துவிடும்.
ஒவ்வொரு முறையும் பொருட் கள் கொண்டு செல்லும் விண் கலத்தை அனுப்புவதற்கு இத் தகைய பூஸ்டர் ராக்கெட்டுகளைத் தயாரிக்க வேண்டியிருப்பதால் நிறைய செலவு ஏற்படுகிறது.
அந்தச் செலவுகளைக் குறைக் கவே, விமானங்கள் பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கு வது போல, பூஸ்டர் ராக்கெட்டு களையும் பத்திரமாகத் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை மேற்கொண்டு வரும் நிறுவனங் களில் 'ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனமும் ஒன்றாகும்.
இந்நிலையில், செவ்வாய்க் கிழமை விண்வெளி நிலையத் துக்கு சுமார் 1,950 கிலோ எடை கொண்ட பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஏற்றது.
அதற்காக 208 அடி நீளமுள்ள ஃபால்கன் 9 எனும் பூஸ்டர் ராக்கெட் தயாரிக்கப்பட்டது. இந்த ராக்கெட் பொருட்கள் அடங்கிய 'டிராகன்' விண்கலத்தை சுமந்து சென்று விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் பாதையில் விட்டுவிட்டது.
ஆனால் அந்த பூஸ்டர் ராக்கெட் கடலில் மிதந்து கொண்டிருந்த கப்பலில் உள்ள ஏவுதளத்தை நோக்கி வந்தது. எனினும், அந்த ராக்கெட்டால் ஏவுதளத்தில் நிற்க முடியாமல் கடலில் விழுந்து வெடித்துச் சிதறியது.
இவ்வாறு ராக்கெட்டைத் தரையிறக்கும் முயற்சி தோல்வி அடைவது மூன்றாவது முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT