Published : 31 Mar 2015 11:49 AM
Last Updated : 31 Mar 2015 11:49 AM
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீயை தரக்குறைவாக்கும் வகையில் அவரது மறைவை கொண்டாடிய வீடியோவை பகிர்ந்த 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
மரணம் அடைந்த சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ (91) இறுதிச்சடங்கு ஞாயிற்றுகிழமை நடந்து முடிந்தது. உலக தலைவர்கள் பலர் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சிங்கப்பூர் மக்கள் லீயின் மறைவின் சோகத்திலிருந்து நீங்காத நிலையில், அவரது மறைவை கொண்டாடும் வகையில் தரக்குறைவான வீடியோ யூடியூபில் பகிரப்பட்டிருந்தது.
மேலும், கிறிஸ்தவ போலீஸாரை அவதூறுப்படுத்தும் விதமான கருத்துக்களும் அந்த வீடியோவில் இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட 16 வயது சிறுவன் சிங்கப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். வழக்கு பதிவு செய்யப்பட்டவர் சிறுவன் என்பதால், அவரது பெயரை போலீஸார் வெளியிடவில்லை.
சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோவை சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் வீடியோ குறித்து புகார் தெரிவித்தனர்.
தனி நபர் அல்லது குறிப்பிட்ட மதத்தை புண்படுத்தும் நோக்கத்தோடான கருத்துக்களை பரப்பிய குற்றத்துக்காக சிறுவனுக்கு அந்நாட்டுச் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறை தண்டனை வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT