Published : 13 Mar 2015 11:02 AM
Last Updated : 13 Mar 2015 11:02 AM
கனடாவில் வித்தியாசமான போட்டி ஒன்று ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியைக் காண்பதற்கும் போட்டியில் பங்கேற்பதற்கும் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இளம் வேனிற்காலம் தொடங்கும்போது, தலைமுடி உறையும் போட்டி நடைபெறுகிறது. 60 நொடிகளில் மைனஸ் 30 டிகிரி செல்ஷியஸில் உறைய வைத்துவிட வேண்டும் என்பதுதான் போட்டி.
ஒவ்வொருவரின் தலை முடியும் பனியால் உறைந்து வித்தியாசமான தோற்றத்தைத் தரும். யார் முடி மிகப் பிரமாதமாக உறைந்திருக்கிறதோ, அவரே வெற்றி பெற்றவர்.
இப்படியும் ஒரு போட்டியா?
தாய்லாந்தின் ோங் புவா லம்பு மாகாணத்தில் வசிக்கும் ஒரு துறவி, கொதிக்கும் எண்ணெயில் அமர்ந்திருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் பய பக்தியோடு அவரை வணங்கிக்கொண்டு நிற்கிறார்கள். அவர் கை படும் பொருட்களை வீட்டில் வைத்தால் நல்லது என்பதால், ஏராளமான பொருட்கள் விற்பனையாகின்றன.
கொதிக்கும் எண்ணெய்யில் விரல்களை வைத்தால் அவ்வளவு எளிதில் சூடு தாக்காது. துறவி உட்கார்ந்திருக்கும் பாத்திரம் இரண்டு அடுக்குகளால் ஆனது. கீழ் அடுக்கில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். மேல் அடுக்கில் எண்ணெய். கீழே இருந்து நெருப்பு எரியும்பொழுது, தண்ணீர் வெப்பத்தை இழுத்துக்கொள்ளும்.
எண்ணெய் சூடாகவே செய்யாது. அதனால் துறவி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எண்ணெய்க்குள் அமர்ந்திருக்கலாம் என்கிறார்கள் தாய்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாத்திட்டுதான் இருப்பாங்க…
ஜெர்மனியில் குடித்துவிட்டு, சுவர்களில் சிறுநீர் கழிப்பவர்கள் அதிகம். இவர்களால் நகரின் சுவர்கள் நாசமாவதோடு, சுற்றுச் சூழலும் கெடுகிறது. பல ஆண்டுகள் என்னென்னவோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பலனளிக்கவில்லை. சுவர்களில் ஸ்பெஷல் ஹைட்ரோபோபிக் பெயிண்ட் அடித்திருக்கிறார்கள்.
இந்த பெயிண்டுக்குத் தண்ணீரை விலக்கும் சக்தி உண்டு. சுவற்றில் தண்ணீர் ஊற்றினால், திருப்பி அனுப்பிவிடும். பெயிண்ட் அடித்து, `சிறுநீர் கழித்தால், திருப்பி உங்கள் மீதே வந்து விழும்’ என்று வாசகத்தையும் எழுதி வைத்தார்கள். ஆனாலும் மக்கள் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சிறுநீர் கழித்தனர்.
அவர்கள் மீதே சிறுநீர் திரும்பிப் பாய்ந்தது. இப்பொழுது யாரும் தெருவில் சிறுநீர் கழிப்பதில்லை. சுவரும் நகரும் சுத்தமாகக் காட்சியளிக்கின்றன.
அடடா! இங்கேயும் அந்த பெயிண்ட்டை வாங்கி அடிக்கலாம்…
இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த ஓராண்டில் மட்டும் அதிக அளவில் கடல்வாழ் உயிரினங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கடலின் ஆழமான, இருளான இடங்களில் இருந்து பெரும்பாலான உயிரினங்கள் அறிமுகமாகியிருக்கின்றன.
மிகச் சிறிய இறால், 2 புதுவகை டால்பின்கள், ஃப்ரில்ட் சுறா, தவளைமீன் போன்று 1,451 உயிரினங்கள் முதல் முதலாக மனிதனின் பார்வையில் சிக்கியிருக்கின்றன. கடல்வாழ் உயிரினங்களில் மனிதர்கள் கண்டறிந்தவை குறைவானவை. இன்னும் கண்டறியப்படாத ஏராளமான விஷயங்கள் கடலில் இருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இன்னும் எவ்வளவு விஷயங்களைக் கடல் ஒளித்து வைத்திருக்கிறதோ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT