Published : 24 Mar 2015 05:04 PM
Last Updated : 24 Mar 2015 05:04 PM
பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில், 148 பேருடன் பறந்த 'ஏ320' ஜெர்மனி நாட்டின் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
'ஏ320' விமானத்தில் சென்ற 148 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமான ஊழியர்கள், பயணிகள் அனைவருமே உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சுவதாக பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே தெரிவித்தார்.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரிலிருந்து ஏர்பஸ் ஏ320 விமானம் ஜெர்மனியில் உள்ள டசல்டார்ப் நகருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்றுகொண்டிருந்தது. பிரான்ஸின் தென்கிழக்கில் இருக்கும் பார்சிலோனெட் பகுதியில் பறந்தபோது கீழே விழுந்ததாக தெரிகிறது.
உள்நாட்டு நேரப்படி காலை 10.47 மணி அளவில் விமானத்திலிருந்து அவசர உதவி அழைப்பு வந்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த விமானத்தில் 142 பயணிகளும் 6 ஊழியர்களும் இருந்தனர். ஜெர்மனி விமான நிறுவனமான லூப்தான்ஸாவின் மலிவு கட்டண பிரிவான ஜெர்மன்விங்ஸைச் சேர்ந்தது இந்த விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு கேசனூவ் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார். விமானத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் அச்சம்
விபத்து குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே, "விமானத்தில் சென்ற பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தகவல்களை வைத்து பார்க்கும்போது, பயணிகள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோணுகிறது" என்று தெரிவித்தார்.
இதனிடையே, விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், சம்பவ பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்ததாகவும் பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் பிரதமர் கவலை
விமான விபத்து குறித்து ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டேயிடம், மெர்கல் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது மீட்பு பணிக்கு பிரான்ஸ் தக்க உதவிகளை அளித்திடும் என்று ஹாலண்டே உறுதியளித்தார்.
அதேவேளையில், விமானம் நொறுங்கி விழுந்த ஆல்ப்ஸ் மலைப் பகுதிக்கு பிரான்ஸ் நாட்டு ஜெர்மன் தூதரக அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT