Published : 03 Mar 2015 12:57 PM
Last Updated : 03 Mar 2015 12:57 PM
ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 16-வது முறையாக மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்தார் பில் கேட்ஸ். இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி 39-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
உலக அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை பிரபல அமெரிக்க வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துவந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் அதே இடத்தில் நீடிக்கிறார்.
கடந்த 21 ஆண்டுகளாக பணக்காரர்களை பட்டியலிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 16-வது முறையாக முதல் இடத்தை பில் கேட்ஸ் தக்கவைத்துள்ளார்.
பிப்ரவரி 13-ஆம் தேதி கணக்கின்படி, பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஓர் ஆண்டில் 3 பில்லியன் டாலர் உயர்ந்து 79 பில்லியன் டாலாராக உள்ளது. பில் கேட்ஸை தொடர்ந்து 2-வது இடத்தில் மெக்ஸிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் உள்ளார்.
3-வது இடத்தில் அமெரிக்காவின் பெரும் முதலீட்டாலர் வாரண் பஃபெட் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 72.7 பில்லியன் டாலராகும்.
ஃபோர்ப்ஸின் நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 1,826 பணக்காரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் கடந்த ஓர் ஆண்டிலிருந்து 181 புதியவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
8-வது முறையாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி
இந்திய அளவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானி, தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார்.
இவரது மொத்த சொத்தின் மதிப்பு 21 பில்லியன் டாலராக (இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 200 கோடி) உள்ளது. கடந்த முறையை காட்டிலும் ஓர் இடம் முன்னேறி உலகப் பணக்கார வரிசைப்படி 39-வது இடத்தில் முகேஷ் உள்ளார்.
முகேஷ் அம்பானிக்கு அடுத்தபடியாக 90 இந்தியர்கள் ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் முக்கியமாக திலீப் ஷங்காவி 44-வது இடத்திலும் அஸிம் ப்ரேம்ஜி 48-வது இடத்திலும், ஷிவ் நாடார் 66-வது இடத்திலும், இந்துஜா சகோதரர்கள் 69-வது இடத்திலும், 208-வது இடத்திலும் சைரஸ் பூணாவாலா மற்றும் லட்சுமி மிட்டல், 418-வது இடத்தில் அனில் அம்பானியும் இடம்பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT