Published : 21 Mar 2015 08:22 PM
Last Updated : 21 Mar 2015 08:22 PM
அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் கருகி பலியாகினர்.
பலியான குழந்தைகள் அனைவரும் 5 வயது முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள். இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக நியூயார்க் தீயணைப்பு துறை செய்தித் தொடர்பாளர் ஜிம் லாங் தெரிவித்தார்.
பலியானவர்களில்4 சிறுவர்கள் மற்றும் 3 சிறுமிகள் அடங்குவர். குழந்தைகளின் தாயாரான 45 வயது பெண்மணி அவரது மகள்களில் ஒருவரான 14 வயது சிறுமி ஆகியோர் ஜன்னல் வழியாகக் குதித்து படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புப் படையினர் சில மணி நேரங்கள் போராடி தீயை அணைத்துள்ளனர். பெட்ஃபோர்ட் அவென்யுவில் உள்ள வீட்டிலிருந்து காலை 12.23-க்கு அழைப்பு வந்துள்ளது. அதன் பிறகு தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து போராடி தீயை அணைத்துள்ளனர்.
தீ எதனால் ஏற்பட்டது என்பதற்கான உடனடியான காரணம் பற்றி காவல்துறை உயரதிகாரி நைக்ரோ கூறும்போது, ஹாட் பிளேட்டை மின் இயக்கத்தில் வைத்து உணவை சூடுபடுத்தியுள்ளனர். அப்போது மின்சாரக் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்திருக்கலாம் என்றார்.
மேலும் குடியிருப்பின் 2வது மற்றும் 3வது மாடியில் புகை எச்சரிக்கை ஒலிப்பான் இல்லை என்று கூறுகிறார் நைக்ரோ.
இந்த தீ விபத்தும் குழந்தைகள் பலியானதும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரின் மிகப்பெரிய துன்பம் என்பதாக இந்த விபத்து பார்க்கப்படுவதாக போலீஸ் அதிகாரி நைக்ரோ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT