Published : 30 Mar 2015 01:27 PM
Last Updated : 30 Mar 2015 01:27 PM
ஏர் கனடா விமானம் தரை இறங்கும்போது சறுக்கி விபத்துக்குள்ளானது. விமானத்தினுள் இருந்த பயணிகள் கதவுகளை உடைத்து கீழே குதித்தனர். இதில் 23 பயணிகள் படுகாயமடைந்தனர்.
கனடாவில், ஏர் கனடா விமானம் 133 பயணிகளுடன் ஸ்டான்ஃபோர்ட் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுதளத்தில் மோதி சறுக்கிய நிலையில் செங்குத்தாக சென்று பனிக் கட்டிகளுக்குள் புகுந்தது.
விமானம் அதி வேகத்தில் தரையில் உரசியபடி 300 மீட்டர் தூரத்துக்கு சறுக்கி ஓடியதில் விமானத்தின் அடிப் பகுதி, இறக்கை கடுமையாக சேதமடைந்தன. பயங்கர சத்தத்தால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தால் விமானத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்தனர்.
விமான கதவு, ஜன்னல்களை உடைத்த பயணிகள் விமானம் ஓடிக் கொண்டிருந்த போதே அதிலிருந்து கீழே குதித்தனர். இதில் பலர் படுகாயமடைந்தனர். 23 பயணிகள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், விமானம் தரை இறங்க முயற்சித்தபோது ஏதோ விமானத்தில் மோதியதால் தடுமாற்றத்தில் விபத்து ஏற்பட்டதாக கனடா விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
"விமானம் தீ பிடித்து எரியும் நிலைக்கு செல்லும் முன்பே, பயணிகள் காப்பற்றப்பட்டனர். சில பயணிகள் அவர்களே குதித்துவிட்டனர். விமானம் விபத்து குறித்து விசாரணைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியபோது ஆண்டனாக்கள் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் விமானத்தின் முக்கியமான லேண்டிங் கியரில் பழுது ஏற்பட்டு விபத்து நேரிட்டிருக்கலாம். அத்துடன் வானிலையும் மோசமானதாக இருந்தது" என்று கனடா போக்குவரத்து பாதுகாப்பு துறை அதிகாரி மேலாண்மை அதிகாரி மைக் கன்னிங்கம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT