Published : 14 Mar 2015 10:59 AM
Last Updated : 14 Mar 2015 10:59 AM
சீனாவின் கட்டுமான நிறுவனம் ஒன்று மிக மிகக் குறைந்த காலத்தில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளைக் கட்டி சாதனை படைத்திருக்கிறது. சாங்ஷா நகரில் இருக்கும் இந்த ஸ்கை சிட்டி, 97 மாடிகளில் 800 குடியிருப்புகளைக் கட்டி 4 ஆயிரம் பேர் வசிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டது. 20 மாடிகளை நிறைவு செய்திருந்தபோது, உள்ளூர் அதிகாரிகள் கட்டிடத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார்கள். இதற்காக ஒரு வருடம் எந்த வேலையும் செய்யாமல், அங்கீகாரத்துக்காகக் காத்திருந்தார்கள்.
அருகில் விமான நிலையம் இருப்பதால், 57 மாடிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு வருட காலத்தாமதத்தைச் சரி செய்ய வேண்டும் என்று திட்டமிட்டது கட்டுமான நிறுவனம். மீதியுள்ள 37 மாடிகளையும் இரவு, பகல் பார்க்காமல் ஏராளமான தொழிலாளர்களை ஈடுபடுத்தி 19 நாட்களில் கட்டி முடித்துவிட்டது. 97 மாடிக் கட்டிடம் என்றால் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற சாதனை கிடைத்திருக்கும். ஆனால் 19 நாட்களில் 37 மாடிகளை கட்டி முடித்த சாதனை எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது!
சாதனை மேல சாதனை செஞ்சிட்டே இருக்காங்க சீனர்கள்!
அமெரிக்காவில் வசிக்கிறார் 21 வயது கேமரென் ப்ராண்ட்லி. அலபாமா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் மூன்று வேளையும் பூச்சிகளை உணவாகச் சாப்பிட்டிருக்கிறார். மனிதர்களின் எதிர்கால உணவாக இருக்கப் போவது பூச்சிகள்தான். அதனால் பூச்சிகளை விதவிதமாகச் சமைத்து, சுவைத்துப் பார்க்கத் திட்டமிட்டேன். பூச்சிகளைச் சமைக்கும் வரை கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் சமைத்த பிறகு, சுவையில் எங்கோ சென்றுவிட்டது.
மாடு, பன்றி இறைச்சிகளுக்குப் பதில் பூச்சிகளை வைத்துக்கொண்டேன். ஒரு மாதத்தில் என் உடலில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. ஃப்ரைட் ரைஸ் முதல் சிப்ஸ் வரை பூச்சிகளில் அனைத்தையும் செய்து பார்த்துவிட்டேன். எண்ணெய் இல்லாமல் பாப்கார்ன் போல சில பூச்சிகளைப் பொறித்தும் உண்டேன். பட்டுபூச்சிகளில் உள்ள பியூபா பருவப் புழுக்கள் தான் எனக்கு மிகவும் விருப்பமானது என்கிறார் கேமரென்.
இந்தியாவில் பூச்சிகளுக்கும் தடை விதிப்பாங்களோ?
சீனாவின் அல்டாய் மலைப் பகுதியில் தங்கம் கிடைப்பது வழக்கம். அங்கே கால்நடைகளை மேய்த்துக்கொண்டு சென்ற ஒருவரின் பார்வையில் பட்டது மஞ்சள் நிற உலோகக் கட்டி. நிலத்திலிருந்து தோண்டி எடுத்தார். வீட்டுக்குக் கொண்டு வந்தார். கட்டியைச் சுத்தம் செய்து, அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். 7 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டி என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. இது 80 சதவிகிதம் சுத்தமான தங்கமாக இருந்தது. நிலத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் அரசாங்கத்துக்குச் சொந்தம். கண்டெடுத்தவர் பாராட்டுகளை வாங்கிக்கொண்டு திரும்பிவிட்டார். அல்டாய் என்றாலே தங்கம் என்று பொருள். இங்கே தங்கம் கிடைப்பது வெகு சகஜம். ஆனால் மிகப் பெரிய அளவில் நிலத்துக்கு மேலே தங்கக் கட்டி கிடைத்திருப்பதுதான் ஆச்சரியம் என்கிறார்கள்.
ம்… கண்டெடுத்தவருக்குக் கொஞ்சம் தங்கமாவது கொடுத்திருக்கலாம்…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT