Last Updated : 05 Mar, 2015 09:53 AM

 

Published : 05 Mar 2015 09:53 AM
Last Updated : 05 Mar 2015 09:53 AM

எவரெஸ்டில் குவியும் குப்பைகள் அபராதம் விதிக்க முடிவு

எவரெஸ்ட் சிகரம் மற்றும் அங்கு செல்லும் வழியில் டன் கணக்கில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால், அங்கு சாகசப் பயணம் செல்பவர்கள் குப்பையை திரும்ப எடுத்து வராவிடில் அவர்களுக்கு அபராதம் விதிக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை எட்மண்ட் ஹில்லாரி, டென்சிங் நார்கே ஆகிய இருவரும் 1953-ம் ஆண்டு சென்றடைந்து வரலாறு படைத்தனர். அதன் பிறகு 60 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் அங்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

எவரெஸ்ட் சிகரம் செல்வதற்கான சீசன் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 மலையேற்ற வீரர்களும் இதே எண்ணிக்கையில் ஷெர்பா இன வழிகாட்டிகளும் அங்கு செல்கின்றனர். ஆனால் செல்லும் வழியில் கழிப்பிட வசதி இல்லாததால் இயற்கை உபாதைக்கு திறந்து வெளியையே அவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் இவர்கள் வீசிய குப்பைகள் மற்றும் மனிதக் கழிவுகள் டன் கணக்கில் சேர்ந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் குப்பை வீசுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று நேபாளம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “2014-ம் ஆண்டு வகுக்கப்பட்ட விதியின்படி மலையேற்ற வீரர்கள் குப்பைகளை வீசுவதற்கு எதிராக 4 ஆயிரம் டாலர் டெபாசிட் பெறப்படுகிறது.

ஒவ்வொரு வீரரும் 8 கிலோ அளவுக்கு குப்பைகள் மற்றும் மனிதக் கழிவை அடிவார முகாமுக்கு திரும்பக் கொண்டுவரவேண்டும். அவ்வாறு கொண்டு வராவிடில் இந்த டெபாசிட் தொகை திரும்பவும் தரப்படாது. இந்த விதி இந்த ஆண்டு மிகவும் கண்டிப்புடன் பின்பற்றப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x