Published : 14 Mar 2015 01:54 PM
Last Updated : 14 Mar 2015 01:54 PM
மும்பை தாக்குதலில் தொடர்பு டைய லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் ஜகியுர் ரஹ்மான் லக்வி (55) சிறையிலிருந்து விடுதலையாக இருந்த நிலையில் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
லக்வியை தடுப்புக் காவலி லிருந்து உடனடியாக விடுவிக்க பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து நேற்று சிறையிலிருந்து விடுவிக்க இருந்த நிலையில், பஞ்சாப் மாநில அரசின் உத்தரவின் பேரில் பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் லக்வி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து பஞ்சாப் உள் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாகிஸ்தான் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதையடுத்து, பொது அமைதி பாதுகாப்பு சட்டத் தின் கீழ் லக்வியை 30 நாட் களுக்கு சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளோம். இதை யடுத்து, அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். இப்போது உள்ள அடியாலா சிறையிலேயே அவர் இருப்பார்” என்றார்.
இதுகுறித்து லக்வியின் வழக் கறிஞர் ராஜா ரிஸ்வான் அப்பாஸி கூறும்போது, “லக்வியை விடுவிக் குமாறு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் 2 முறை உத்தரவிட்ட பிறகும் அவரை கைது செய்ய உத்தரவிட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் திங்கள் கிழமை முறையீடு செய்யப்படும்” என்றார்.
மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட லக்விக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி இஸ்லாமாபாத் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் நெருக்கடியால், விடுதலையாவதற்கு முன்பாகவே, லக்வி பொது அமைதி பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
எனினும், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி லக்வியின் தடுப்புக் காவலை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. எனினும், சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு முன்பே, ஆப்கனைச் சேர்ந்த ஒருவரை கடத்திய வழக்கில் லக்வி மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கிடையே, அரசுத் தரப்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், லக்வியின் தடுப்புக் காவலை ரத்து செய்யும் உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து லக்வி சார்பில் தாக்கல் மீண்டும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லாததால் லக்வியை உடனடியாக விடுவிக்குமாறு நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT