Published : 21 Mar 2015 01:15 PM
Last Updated : 21 Mar 2015 01:15 PM
ஏமன் மசூதிகளில் நடத்தப்பட்ட தற்கொலை படைத் தாக்குதல்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈடுப்பட்டதாக ஆதாரங்கள் இல்லாததால் தாக்குதலுக்கு அந்த இயக்கத்தை தொடர்புப்படுத்த முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு
ஏமன் தலைநகர் சனா மற்றும் சாடா மாகணங்களில் வெள்ளிக்கிழமை தொழுகையை குறிவைத்து மசூதிகளில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து 3 குண்டுவெடிப்புகள் நடந்த இந்த மோசமான தாக்குதலில் தற்போதைய நிலையில் 137 பேர் பலியாகினர். 350–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது போன்ற தாக்குதல் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஐ.எஸ். பொய் பிரச்சாரம்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய செய்தித் தொடர்பாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட், "தற்போதைய நிலையில் ஏமன் தாக்குதலுக்கு அந்நாட்டு தீவிரவாத இயக்கங்களுக்கு ஐ.எஸ். உதவியதாக எந்த வியூகமும் செய்ய முடியாது. அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
ஐ.எஸ் இயக்கம் ஏற்கெனவே துனிசியா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. அந்த தாக்குதலில் அவர்கள் ஈடுபடாத நிலையில், தங்களது கோட்பாடுகளை பரப்ப பிரச்சார நோக்கங்களுக்காக இது போல பொறுப்பேற்றுக் கொள்கின்றனர். தாக்குதலுக்கு அவர்கள் பொய்யாக பொறுப்பேற்கலாம்" என்றார்.
அரபு நாடான ஏமனில் அதிகாரப்போட்டி காரணமாக, நீண்ட காலமாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்கு தலைநகர் சனாவை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர்.
இதனால் அங்கு அரசியல் அசாதாரண சூழல் நிலவுகிறது. தற்போது தாக்குதலுக்குள்ளான மசூதிகள் அனைத்தும் ஏமன் ஹவுத்தி ஷியாப் பிரிவு மக்கள் வழிபடும் இடங்களாகும். உள்நாட்டு பிரச்சினைகளில் அரசை கவிழ்த்து தலைநகர் சனாவை உள்ளிட்ட 21 முக்கிய மாகாணங்களை ஹவுத்தி படையினர் தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT