Published : 14 Mar 2015 04:27 PM
Last Updated : 14 Mar 2015 04:27 PM

யாழ்ப்பாணத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக பேரணி: மீனவர்களை கட்டுப்படுத்த மோடிக்கு கோரிக்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது.

இந்திய பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாள் சுற்றுப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். இதன் ஒரு பகுதியாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு சனிக்கிழமை சென்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து வருவதை பிரதமர் நரேந்திமோடி கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் சார்பில் பேரணி நடைபெற்றது.

சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய இந்தப் பேரணி 11 மணியளிவில் இந்திய துணைத் தூதரகத்தில் முடிவடைந்தது. பேரணியின் இறுதியில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் சார்பாக இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த கோரிக்கை மனுவில்,'' கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்த நிலையில் எமது தமிழ் மீனவர்கள் தற்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இத்தருணத்தில் தமிழக மீனவர்களின் அத்துமீறிய சட்ட விரோத மீன்பிடியானது எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்து வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் இலங்கை - இந்திய கடலோர எல்லைப் பாதுகாப்பினை பலப்படுத்தி இவ்வாறான சட்ட விரோத மீன்பிடிப்பினை நிறுத்தி இலங்கை வட பகுதி மீனவர்களின் வாழ்க்கையை செழிப்படைய செய்ய வேண்டும்.

மேலும் உள்நாட்டப் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த நிலங்களில் குடியமர்த்தல், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், இந்திய வீட்டுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை எட்டரை லட்சமாக வழங்க வேண்டும்'' உள்ளிட்ட கோரிக்கைகளும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x