Published : 09 Mar 2015 03:24 PM
Last Updated : 09 Mar 2015 03:24 PM
பிரிட்டன் நாடாளுமன்றம் ஆங்காங்கே உடைந்து கொட்டும் கதியில் உள்ளதோடு, எலிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. இதனால் உறுப்பினர்கள் எலிகளுக்கு நடுவே பணியாற்றும் நிலை உள்ளது.
தேம்ஸ் நதிக் கரையில் அமைந்திருக்கும் மிகவும் பழமை வாய்ந்த பிரிட்டன் நாடாளுமன்றம் தற்போது கடுமையான சேதங்களோடு காணப்படுகிறது.
1870-ல் சார்லஸ் பாரே மற்றும் ஆகஸ்டஸ் புகினால் வடிவமைக்கப்பட்ட பிரிட்டன் நாடாளுமன்றம் 1834-ல் ஏற்பட்ட தீ விபத்துக்கு பின்னரும் 2-ஆம் உலகப் போரின் முடிவிலும் மறு சீரமைக்கப்பட்டது. ஆனாலும் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனை உள்ளிட்ட பகுதிகள் அதே பழமையுடன் உள்ளது.
இந்தியாவைப் போல இரு அவைகளாக பிரிக்கப்பட்டிருக்கும் ஒரே நாடாளுமன்றத்தில், மேல் அவை கீழ் அவை என உறுப்பினர்கள் பணியாற்றுகின்றனர். இத்தகைய பிரிட்டன் நாடாளுமன்றம் தற்போது கடுமையான சேதங்களுடன் இயங்கி வருகின்றது. இந்த நாடாளுமன்ற கட்டடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக உள்ளது.
தளங்கள் உடைந்து கொட்டுவதும், பனிக் காலங்களில் தளத்திலிருந்து ஏற்படும் கசிவுகளிலிருந்து தப்பிக்க, காகித கூடைகளுடன் பணியாளர்கள் நடமாடும் நிலை காணப்படுகிறது.
இரு அவை உறுப்பினர்களும் ஒன்றுகூடும் வெஸ்ட் மினிஸ்டர் அரண்மனையும் மிக மோசமான நிலையில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் நின்று புகைப்படம் எடுக்கும் பிரபல கடிகார கோபுரம் சுமார் 18 அங்குலத்துக்கு சாய்ந்து நிற்கின்றது. சுவர்களில் உள்ள கற்களால் ஆன வேலைப்பாடுகள் காற்றினால் மாசுப்பட்டு முற்றுலுமாக அரிக்கப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் முடங்கி கிடக்கும் எலிகள் இரவு நேரங்களில் ஆங்காங்கே சுற்றுகின்றன. இந்த எலிகள் உறுப்பினர்கள் தேனீர் அருந்தும் இடங்களிலும் இடையூறு செய்வதாக உறுப்பினர்கள் புகார் அளித்துள்ளனர். எலிகளை கண்டால் உடனடியாக தெரியப்படுத்த ஹாட்லைன் தொலைப்பேசி சேவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆனே மெகந்தோஷ், நூலகங்ளில் எலிகள் தொல்லை இருப்பது குறித்து புகார் தெரிவித்ததோடு, எலிகளை ஒழிக்க பிரிட்டன் அரண்மனை பூனையை வீட்டு விலங்கு காப்பகத்திலிருந்து தத்தெடுத்து வளர்க்க கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
மேலும், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அதிக உஷ்ணம் ஏற்படுவதாகவும் அதனால் வேலை பாதிக்கப்படுவதாகவும் உறுப்பினர்கள் குறை தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் அதனை சரி செய்யும் செலவு குறித்தும் அறிக்கை தர நிபுணர்கள் குழுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அதன் விவரம் அவையில் கடந்த வாரம் வாசிக்கப்பட்டது. அதில், மறுசீரமைப்பு பணிகளுக்கு சுமார் 300 கோடி பிரிட்டன் பவுண்டுகள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது.
இதற்கான பணிகள் 2021-க்குள் தொடங்கும் என்றும், அவை முடிவடைய பல ஆண்டுகள் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிடப்பட்ட பணிகள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாவிட்டால், தீ விபத்து, இடிபாடுகள் போன்ற பேரழிவு நிகழ்வுகள் நேரிடக்கூடும் என்று உறுப்பினர்கள் கவலைத் தெரிவித்தனர்.
பணி நடக்கும் காலத்தில் உறுப்பினர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும், நாடாளுமன்ற அலுவல்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கே பெரும் தொகை செலவாகும் என்பதால் அதனை எதிர்கொள்வது குறித்து நாடாளுமன்றம் விவாதித்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT