Published : 05 Feb 2015 10:25 AM
Last Updated : 05 Feb 2015 10:25 AM
பிணைக் கைதியாக பிடித்து வைத்திருந்த பைலட்டை ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் உயிருடன் எரித்துக் கொன்றதற்கு பழிவாங்கும் வகையில், இராக் பெண் தீவிரவாதி உட்பட 2 பேரின் மரண தண்டனையை ஜோர்டான் அரசு நேற்று நிறைவேற்றியது.
இதுகுறித்து ஜோர்டான் அரசு செய்தித் தொடர்பாளர் முகமது அல்-மொமானி நேற்று கூறும்போது, “இராக் பெண் தற்கொலைப்படை தீவிரவாதி சாஜிதா அல்-ரிஷாவி (44) மற்றும் இராக்கின் அல்-காய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஜியாத் அல்-கர்போலி ஆகிய 2 பேரும் அதிகாலை 4.00 மணிக்கு தூக்கிலிடப்பட்டனர்” என்றார்.
தலைநகர் அம்மானின் தெற்குப் பகுதியில் உள்ள ஸ்வாகா சிறை யில் இஸ்லாமிய சட்ட அதிகா ரிகள் முன்னிலையில் இருவருக் கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம் ஜோர்டான் விமானப்படை பைலட் முவத் அல்-கசாபே (26) ஓட்டிச் சென்ற விமானம் சிரியாவில் விபத்துக்குள்ளானது. அப்போது உயிர் தப்பிய கசாபேவை ஐஎஸ் தீவிரவாதிகள் சிறைபிடித்தனர். இவரையும் ஜப்பான் பிணைக் கைதி ஒருவரையும் விடுவிக்க வேண்டுமானால் ஜோர்டான் சிறையில் உள்ள ரிஷாவியை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதை அரசு பரிசீலித்து வந்தது.
இந்நிலையில், ஜப்பான் கைதியை 3 தினங்களுக்கு முன்பு தலையை துண்டித்து கொலை செய்தனர். கசாபேயை உயிருடன் எரித்துக் கொன்றது தொடர்பான வீடியோ காட்சியை ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்டது. இதற்கு பழிவாங்கும் வகையில், ரிஷாவி உட்பட 2 தீவிரவாதிகளை ஜோர்டான் அரசு நேற்று தூக்கிலிட்டது.
அம்மான் நகரில் 60 பேரை பலிவாங்கிய நடைபெற்ற தீவிர வாதத் தாக்குதலில் தொடர்புடை யதாகக் கூறி ரிஷாவிக்கு கடந்த 2005-ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இராக்கில் ஜோர்டானைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றது உட்பட பல்வேறு தீவிரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 2007-ம் ஆண்டு கர்போலிக்கு ஜோர்டான் மரண தண்டனை விதித்தது.
உலக தலைவர்கள் கண்டனம்
அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜோர்டான் மன்னர் அப்துல்லா 2 கூறும்போது, “தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பைலட் கசாபே ஒரு ஹீரோ. அவரைக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுக்கப்படும்” என்றார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று கூறும்போது, “தீவிரவாதிகளின் ஈவிரக்கமற்ற இந்த கொடிய செயலை வன்மை யாக கண்டிக்கிறேன். இதை மன்னிக் கவே முடியாது. ஜப்பான் மக்கள், அரசு சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” என்றார்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறும்போது, “ஜோர்டான் பைலட் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக வெளியான விடியோ உண்மை என்றால், ஐஎஸ் தீவிரவாதத்தின் கொடுந்தன் மையை புரிந்து கொள்வதற்கு இது இன்னொரு உதாரணமாக அமைந்துள்ளது. ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை ஒழிக்க சர்வதேச நாடுகளுடன் இணைந்து பாடுபடுவோம்” என்றார்.
அதிர்ச்சி தருகிறது: ஐநா
ஐநா பொதுச்செயலர் பான் கி மூன் கூறும்போது, “ஜோர்டான் பைலட் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி தருகிறது, பதற வைக்கிறது. மனித உயிரை பொருட்டாக மதிக்காக கொடிய தீவிரவாத இயக்கம் ஐஎஸ் அமைப்பு. இந்த கொடிய தீவிரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் தங்களது முயற்சியை இரட்டிப்பாக்க வேண்டும்” என்றார்.
15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் பைலட் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT