Published : 18 Apr 2014 05:58 PM
Last Updated : 18 Apr 2014 05:58 PM

தென்கொரிய கப்பல் விபத்து: 28 உடல்கள் மீட்பு; 268 பேரை தேடும் பணி தீவிரம்



தென்கொரிய கப்பல் விபத்தில் உயிரிழந்த 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 268 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தென்கொரியாவின் தென்மேற்கு கடல் பகுதியில் புதன்கிழமை காலை பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்தது. கடலுக்குள் மூழ்கிய 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் உள்ளிட்ட 475 பயணிகளை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் 28 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 268 பயணிகள் மாயமாகியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து சீவொல் கப்பல் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. 480 அடி நீளமும், 6,586 டன் எடையும் கொண்ட இந்தப் கப்பல் 1994-ம் ஆண்டு ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக 900 பேர் பயணிக்கலாம்.

எனினும், சம்பவ தினத்தன்று இந்தப் கப்பலில் 477 பயணிகள் இருந்தனர். தவிர 150 வாகனங்களும் இருந்தன. தென்மேற்குக் கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் ஜெஜூ தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று கப்பல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் தலைகீழாகக் கவிழ்ந்தது.

புதன்கிழமை அதிகாலையில் உதவி கோரி இந்தப் கப்பலில் இருந்து சிக்னல் அனுப்பப்பட்டது. உடனே, 100 கடலோர காவலர்களும், கடற்படை கப்பல்களும், மீன்பிடி கப்பல்களும், 18 ஹெலிகாப்டர்களும் விரைந்து வந்து 15 பள்ளி மாணவர்கள் உள்பட 179 பேரை உயிருடன் மீட்டனர்.

இந்த விபத்தில் இதுவரை 28 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 268 பேரைக் காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காணாமல் போனவர்களை தேடும் பணி இன்றும் நீடித்து வருகிறது.

கடல் சீற்றம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏற்பட்டுள்ள இருள் சூழல் காரணங்களால் பயணிகளை மீட்கும் பணி தாமதமனது. இதனால் மாயமானதாக அறிவிக்கப்பட்டுள்ள பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தேடல் பணியில் இன்று 535 கடலோர காவலர்கள் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் 31 விமானங்களும், 173 கப்பல்களும் மீட்பு பணிக்காக முடக்கி விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x