Last Updated : 28 Feb, 2015 09:07 AM

 

Published : 28 Feb 2015 09:07 AM
Last Updated : 28 Feb 2015 09:07 AM

200 நோயாளிகளை கொன்ற மருத்துவ ஊழியருக்கு ஆயுள் சிறை: ஜெர்மனியை உலுக்கிய சம்பவம்

ஜெர்மனியில் சுமார் 200 நோயாளிகளை கொன்ற மருத்துவ ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மருத்துவப் பணியாளராக பணியாற்றி வந்தவர் நீல்ஸ் எச் (39). கடைசியாக 2003 முதல் 2005-ம் ஆண்டு வரை டெல்மன்ஹோர்ஸ்ட் நகரில் பணியாற்றினார்.

அப்போது மட்டும் அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சுமார் 50 நோயாளிகளை கொலை செய்துள்ளதை ஒப்புக் கொண்டுள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் 200 நோயாளிகளை கொலை செய்து இருக்கலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஜெர்மனியில் நடைபெற்ற மிகமோசமான தொடர் கொலை சம்பவமாக இது கருதப்படுகிறது.

பல மாதங்களாக நடைபெற்ற விசாரணையின்போது தொடர்ந்து மவுனம் சாதித்து வந்த அந்த நபர், கடந்த ஜனவரி மாதம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், அதற்காக வருந்துகிறேன் என்று தெரிவித்தார்.

உலகில் நடந்த தொடர் கொலைகள் வரலாற்றில் அதிகம் பேரை கொலை செய்து நான் வரலாற்று சாதனை படைத்துள்ளேன் என்று சிறையில் தன்னுடன் இருந்தவர்களிடம் அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கு சில குறிப்பிட்ட ஊசி மருந்தை செலுத்தி அவர்களது ரத்த அழுத்தத்தை குறைத்து அவர்களை கொலை செய்துள் ளார். அவை பெரும்பாலும் இயற்கையான மரணம் போலவே தோன்றியுள்ளன.

பல நேரங்களில் உயிருக்கு போராடும் நோயாளி களை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது குறித்து அவர் தனது சக ஊழியர்களுடன் சவால் விட்டு போட்டியில் ஈடுபட்டுள்ளார். இதற்காகவே சாதாரணமாக இருக்கும் நோயாளிகளுக்கு கூட தேவையில்லாத மருந்துகளை செலுத்தி அவர்களை ஆபத்தில் தள்ளியுள்ளார்.

அவர் வேண்டுமென்றே செய்த இந்த காரியத்தால் உயிருக்கு போராடி பல நோயாளிகள் இறந்துவிட்டனர்.

ஒருமுறை அவர் ரகசியமாக ஒரு நோயாளிக்கு மருந்தை செலுத்தியபோது சக ஊழியர்கள் அவரை கையும் களவுமாக பிடித்துவிட்டனர். அப்போதும் கூட அவர் சில நோயாளிகளிடம்தான் இதுபோன்று நடந்து கொண்டிருப்பார் என்று கருதப்பட்டது. பிறகு நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின்போது சுமார் 200 நோயாளிகள் வரை அவரால் கொல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x