Published : 11 Apr 2014 03:35 PM
Last Updated : 11 Apr 2014 03:35 PM

எம்.எச்.370-ன் கருப்புப் பெட்டியில் இருந்தே சிக்னல்கள் வருகிறது: ஆஸி. பிரதமர் நம்பிக்கை

இந்தியப் பெருங்கடலின் தெற்கு பகுதியிலிருந்து பதிவான சிக்னல்கள், மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370-ன் கருப்புப் பெட்டியில் இருந்தே வருகிறது என ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

ஷாங்காயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது:

"சோனார் நீர்முழ்கி இயந்திரத்தில் பதிவான இரண்டு சிக்னல்களும் மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியானதுதான் என்பதில் முழு நம்பிக்கை பிறந்துள்ளது. கடந்த 5-ம் தேதி பதிவான 2 சிக்னல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் எங்களுக்கு இந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விமானத்தை தேடும் பணி தற்போது உச்சக்கட்ட நிலையில் உள்ளது. தேடல் பகுதி குறுகிய வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னதாக 75 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பிலிருந்து 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவாக குறைக்கப்பட்டுள்ளது. பதிவான சிக்னல்கள்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பயணத்தின்போது, மலேசிய விமானத்தின் ட்ரான்ஸ்மிட்டர்கள் வேண்டுமென்றே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.

மேலும், விமானம் பறக்க ஆரம்பித்த சில நேரங்களில் தனது பயணப் பாதையை மாற்றி, தாழ்வான பகுதியை நோக்கி சென்றது ஏன்? ராடார் பதிவிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தோடு இந்த வேலைகள் செய்யப்பட்டதா? என்பது குறித்த கேள்விகளுக்கு விரைவில் பதில் தெரியவரும்.

மீட்பு குழுவினர் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் பணியை பல ஆயிரம் சதுர கி.மீ. கடலுக்கு அடியில் நவீன கருவிகளுடம் மேற்கொண்டு வருகின்றனர். கருப்புப் பெட்டி காலாவதி ஆகும் நிலையில் இருக்கிறது என்பதால் அதனை தேடும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.

முன்னதாக, தெற்கு இந்திய கடல் பகுதி முழுவதிலும் எந்தத் தகவலும் இன்றி தேடல் பணியில் ஈடுப்பட்டதில் நாங்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தோம். அதில் 30 நாட்களை நாங்கள் செலவழித்துவிட்டது எங்களுக்கு கவலை அளிக்கிறது என்றாலும், இப்போது கிடைத்துள்ள தகவல் நம்பிக்கை ஊட்டும் வகையில் உள்ளது.

விரைவில் விமானம் குறித்த உறுதியான தகவல்கள் வெளியிடப்படும். விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் பெரும் அதிர்ச்சியுடன், எங்களது தகவலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாங்கள் அறிவோம்" என்றார் அவர்.

விமான நிபுணரான கிரெக் வால்ட்ரோன் கூறுகையில், "பதிவாகியுள்ள சிக்னல்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இந்த பணி நிறைவடைய இந்த தகவல் மிகவும் முக்கியமானது" என்றார்.

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 பீஜிங் நோக்கி சென்றபோது, கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி அதிகாலை 2.40 மணிக்கு மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது என்பது குறித்து திட்டவட்டமான தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அந்த விமானம் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

விமானம் மாயமானபோது விமானி அறையில் நடந்தது என்ன, என்ன பேசப்பட்டது என்பதை அறிவதற்காக, அவற்றை பதிவு செய்யும் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கருப்பு பெட்டியில் இருந்து வருகிற சிக்னல் மூலம், அது இருக்கிற இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஓஸன் ஷீல்டு என்னும் ஆஸ்திரேலிய போர்க் கப்பலும், 'எச்.எம்.எஸ். எக்கோ' என்னும் இங்கிலாந்தின் நீரமூழ்கி கப்பலும் ஈடுபட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x