Published : 16 Feb 2015 12:24 PM
Last Updated : 16 Feb 2015 12:24 PM
எகிப்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பிணைக் கைதிகள் 21 பேரை வரிசையாக மண்டியிட வைத்து, அவர்களது தலையை துண்டிக்கும் வெறிச்செயல் வீடியோவை ஐ.எஸ். அமைப்பு பகிரங்கமாக வெளியிட்டு, சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகளை ஐ.எஸ். அமைப்பு ஞாயிற்றுகிழமை இரவு வெளியிட்டுள்ளது. அதில், எகிப்திய கிறிஸ்தவர்கள் 21 பேரை கடற்கரைப் பகுதியில் வரிசையாக மண்டியிட வைத்து அமர்த்தி, அவர்களுக்கு பின்னால் ஐ.எஸ். தீவிரவாதிகள் முகமூடியுடன் ஆரஞ்சு நிற உடையில் நிற்பதாகவும் காண்பிக்கப்படுகிறது.
பின்னர், தீவிரவாதி ஒருவர் பேசும் காட்சியும், சிறிது இடைவெளியில் கடற்கரையில் 21 பேரின் ரத்தத்தை அலைகள் அடித்துச் செல்லும்படியான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
வீடியோவில் தோன்றிப் பேசும் தீவிரவாதி, கிறிஸ்தவர்களை குறிப்பிடும்படியாக, "சிலுவைப் போராளிகளே, அனைவரும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள். எங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு இயங்கும் நீங்கள் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஒசாமா பின் லேடனை புதைத்த இந்தக் கடலில் உங்களது ரத்தத்தைக் கலப்போம் என்று அல்லாவுக்கு உறுதி அளிக்கிறோம்" என்கிறார்.
வீடியோவில் தோன்றும் தீவிரவாதி ஐ.எஸுக்கு ஆதரவான லிபிய நாட்டவர் என்று தன்னை வட - அமெரிக்க ஆங்கில மொழித் தோரணையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஐ.எஸின் இந்த கொடூரச் செயலை சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன. எகிப்து அரசு, இந்த சம்பவத்தை அடுத்து தங்களது நாட்டில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனை எகிப்தில் உள்ள சன்னி இஸ்லாமியர்களின் தலைமையான அல்-ஹஷாரும் கண்டித்துள்ளது. இது குறித்து அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அல்-ஹஷாருக்கு அப்பாவி எகிப்தியர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான செய்தி கிடைத்தது. மிகவும் வருந்தக்கூடிய விஷயம் இது.
ஐ.எஸ். நடத்தும் காட்டுமிராண்டித்தனத்துக்கு இஸ்லாமியத்துக்கும் தொடர்பு இல்லை. அவர்கள் செய்வது மனிதாபிமானத்துக்கு இஸ்லாமியத்துக்கும் எதிரானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT