Published : 18 Feb 2015 10:14 AM
Last Updated : 18 Feb 2015 10:14 AM
அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் இந்திய இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நியூஜெர்சி பகுதியில் மதுக்கடை நடத்தி வருகிறார் அமித் படேல்(28). இவருக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது.
சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பு கூறும்போது, "அமித் படேல், கடையில் தனியாக இருந்தபோது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் மிக அருகாமையில் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அமித் படேல் உயிர் பிரிந்துள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் மர்ம நபர் கடைக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தவில்லை. பணத்துக்காக கொலை நடந்ததாக தெரியவில்லை.
கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள இந்து கோயில் மீது மர்ம நபர்கள் நேற்று தாக்குதல் நடத்திய நிலையில், அடுத்த நாளே நியூஜெர்சியில் இந்திய இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இந்து அமெரிக்க பவுண்டேஷன், "கடந்த ஜூலை மாதம் முதல் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்பாக போலீஸார் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில வெறுப்புப் பிரச்சார வாசகங்கள் தொடர்பானவை, சில தாக்குதல் தொடர்பானவை" என தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதம் ஜார்ஜியாவில் உள்ள விஷ்வ பவன் இந்து மந்திரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிவன் சிலை மீது கருப்புப் பெயின்ட் பூசப்பட்டதும், கோயிலின் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT