Published : 24 Feb 2015 01:30 PM
Last Updated : 24 Feb 2015 01:30 PM
மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் போலீஸார் 'முரட்டுத்தனம்' காட்டியதை பதிவு செய்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. | வீடியோ பதிவு கீழே |
மாலத்தீவு போலீஸாரின் இந்த செய்கை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
மாலத்தீவு முன்னாள் அதிபரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான முகமது நஷீத், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், முகமது நஷீத்தை மாலி போலீஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்லும் காட்சிகளும், அந்த நடவடிக்கையின்போது நஷீத்தின் சட்டை கிழந்து கிடக்கும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
தன்னைச் சூழ்ந்த செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்க முற்பட்டபோதுதான் நஷீத்திடம் போலீஸ் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது.
போலீஸாரால் அவர் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்லப்படுவதும், அவர் நிலை தவறி கீழே விழுந்து தவிப்பதுமான காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இந்தியா கவலை:
இந்தக் கைது நடவடிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், "மாலத்தீவில் தற்போது உள்ள அரசியல் சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. முன்னாள் அதிபரை கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மீறிய நிலையில் காணப்படுக்கிறது. இது தவறான அணுகுமுறை" என்று இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறது மாலத்தீவு அரசு?
முன்னாள் அதிபரை கைது செய்வதற்கு முன்பே, "இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பஞ்ச சீல ஒப்பந்தத்தின்படி, மாலத்தீவின் உள்விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு இருக்காது என்று எதிர்ப்பார்க்கிறோம்" என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் துன்யாம் மாவூன் குறிப்பிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
மோடி மாலத்தீவு பயணம்
பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மாலத்தீவு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், மாலத்தீவு அரசிடம் இருந்து இப்படியான கருத்து வெளியானது.
அந்நாட்டின் முன்னாள் அதிபர் நஷீத் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டது குறித்து இந்தியத் தரப்பில் எந்த கருத்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அவரைக் கைது செய்த விதம்தான் விதிமுறைகளை மீறியதாகவும், சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தியா தனது கருத்தைப் பதிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT