Published : 11 Feb 2015 04:12 PM
Last Updated : 11 Feb 2015 04:12 PM
ஒரு வருடத்தில் நடக்கும் 5 தற்கொலைகளில் ஒன்று வேலைவாய்ப்பின்மையால் நிகழ்கிறது என்று சூர்ஜ் பல்கலைக்கழக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000 முதல் 2011-ஆம் ஆண்டுவரை 63 நாடுகளில் நடந்த தற்கொலைச் சம்பவங்களைக் கொண்டு நடத்தபட்ட ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, தெற்கு, வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா, ஐரோப்பா அல்லாத நாடுகளில் நிகழ்ந்த தற்கொலை சம்பவங்கள் குறித்து சூர்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கெர்லாஸ் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.
இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்தியா மற்றும் சீனா இடம்பெறவில்லை.
இது குறித்து சூர்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர் கெர்லாஸ் கூறும்போது, "தற்கொலைகள் எந்த நாட்டில் நடந்தது என்ற கட்டத்துக்கு போவதற்கு முன்னரே, தற்கொலைகளில் ஒருமித்த காரணம் இருந்தது தெரிய வந்தது. அதில், ஆண், பெண் என இரு பாலினத்தவரும் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்குள்ளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று தெரிந்தது.
2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர், குறுகிய கால அளவில் 5,000 தற்கொலைகள் நடந்துள்ளன. இதற்கான ஆய்வுகள் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த இடைப்பட்ட காலங்களில் நடந்த தற்கொலைகளில் 46,000 சம்பவங்கள் வேலைவாய்ப்பின்மையால் நடந்தவை என்பதும் எந்த ஆய்விலும் கூறப்படவில்லை.
பொருளாதார நெருக்கடி நிலையின்போது மட்டும் 9 மடங்கு தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
சாதரணமானது முதல் மிக அதிகமான வேலைவாய்ப்பின்மை உள்ள நாடுகளை தாண்டி மற்ற நாடுகளிலும் இந்த பாதிப்பு உள்ளது. இந்த ஆய்வின் முடிவினை கருத்தில் கொண்டு வளரும் நாடுகள் அனைத்தும் வேலைவாய்ப்புக்கு தகுந்த திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். முதலீடுகள் அனைத்தும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இருப்பதை அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான வேலைவாய்ப்பு தன்மையே நாடுகளை முன்னேற்ற பாதைக்கு எடுத்துசெல்லும். அரசுகளின் கவனக்குறைவால் ஏற்படும் தற்கொலைகளில் இளைஞர்களை இழக்கும் நிலையானது ஆரோக்கியமானதாக அமையாது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT