Last Updated : 20 Feb, 2015 05:25 PM

 

Published : 20 Feb 2015 05:25 PM
Last Updated : 20 Feb 2015 05:25 PM

விவாகரத்துக்கு ஆளாகும் அமெரிக்க பெண் மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பணிச் சுமை காரணமாக, அமெரிக்காவில் விவாகரத்துக்கு ஆளாகும் பெண் மருத்துவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சமவயது ஆண் மருத்துவர்களோடு ஒப்பிடும்போது, பெண் மருத்துவர்கள் ஒன்றரை மடங்கு அதிகமாக விவாகரத்து செய்யும் நிலைக்கு உள்ளாகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகிறது.

அதிகமான நேரம் அவர்கள் தொடர்ந்து வேலை செய்வதால், இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

''வேலையை முடிக்க வேண்டிய அவசியத்திலும், குடும்பத்தையும் வேலையும் சமன்செய்ய வேண்டிய கட்டாயத்திலும் இருக்கும் பெண் மருத்துவர்கள் அதிக அளவிலான நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்” என்கிறார் பொது மருத்துவமனையைச் சார்ந்த டேன் லி.

ஒரு வாரத்துக்கு 40 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலை பார்க்கும் பெண் மருத்துவர்களுக்கு, அதைவிடக் குறைவான நேரமே வேலை பார்க்கும் ஆண்களைக் காட்டிலும் விவாகரத்து ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறதாம். ஆண் மருத்துவர்கள் ஒரு வாரத்துக்கு 40 மணி நேரங்களுக்கு அதிகமாக வேலை பார்த்தாலும் அவர்களின் விவாகரத்துக்கான வாய்ப்புக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

இது பற்றி ஹார்வர்டு மருத்துவ பள்ளியின் மூத்த ஆசிரியர் அனுபம் ஜெனா கூறும்போது ''மற்ற பிற பெண் மருத்துவ பணியாளர்கள், செவிலிகள், வழக்கறிஞர்களோடு ஒப்பிடும்போது, பெண் மருத்துவர்களின் விவாகரத்து விகிதம் குறைவாகவே இருக்கிறது'' என்றார்.

வருடாந்திர ஆய்வான இந்த ஆராய்ச்சிக்கு, சுமாராக 30 லட்சம் அமெரிக்க சமூக குடும்பங்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டு அமெரிக்க சென்சஸ் பீரோவால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2008ல் தொடங்கி 2013 வரையிலான ஆராய்ச்சி முடிவுகள் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.

குறைந்த பட்சமாக ஃபார்மசிஸ்டுகளின் விவாகரத்து விகிதம் 23 சதவீதத்திலும், அதிக பட்சமாய் மருத்துவம் அல்லாத துறையைச் சார்ந்தவர்கள் விவாகரத்து செய்யும் விகிதம் 35 சதவீதத்திலும் இருக்கிறது. இந்த ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவ நாளேட்டில் வெளியிடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x