Published : 07 Jan 2015 06:05 PM
Last Updated : 07 Jan 2015 06:05 PM
பாரீஸில் உள்ள பத்திரிகை அலுவலகத்தின் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பத்திரிகை ஆசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹெப்டோ என்ற நாளிதழ் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கேலியும், கிண்டலுமாக செய்திகளை வெளியிடுவதை இப்பத்திரிகை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த அலுவலகத்துக்குள் நேற்று துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியாக சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பத்திரிகை அலுவலகமே ரத்த வெள்ளத்தில் மிதந்தது. தாக்குதலை முடித்துக் கொண்ட தீவிரவாதிகள் அங்கிருந்து வெளியே வந்தனர்.
சாலையோரத்தில் கார் ஒன்றை கடத்திய அவர்கள், நடந்து சென்றவர்கள் மீது காரை ஏற்றியதுடன், வழி மறித்த போலீஸாரையும் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.
பத்திரிகை ஆசிரியர், 4 கார்ட்டூனிஸ்டுகள், இரு போலீஸார் உட்பட 12 பேர் இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீவிரவாதிகள் நவீன ரக துப்பாக்கிகளையும், ராக்கெட் லாஞ்சர்களையும் வைத்திருந்தனர். கருப்பு நிற தலைப்பாகையுடன் கூடிய முகமூடி அணிந்திருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.
தாக்குதலுக்கு காரணம்
சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவன் அபுபக்கர் அல் பக்தாதியை கிண்டல் செய்யும் வகையில் இந்த பத்திரிகையில் கார்ட்டூன் வெளியாகி இருந்தது. இதற்கு பழி வாங்கும் வகையில் இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.
2011-ம் ஆண்டு முகமது நபியைப் பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டதாக இதே பத்திரிகை அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.
தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாரீஸ் நகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரில் அனைத்து பகுதிகளிலும் தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் ஹோலாந்த் அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாக கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு போலீஸாருக்கு முக்கிய உத்தரவுகளை அளித்துள்ளார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் கண்டனம்
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உலகின் எந்த மூலையிலும் தீவிரவாதத்துக்கும், வன்முறைக்கும் இடமளிக்க கூடாது. தீவிரவாதத்தை வேருடன் அழிக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரீஸ் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட சர்வதேச தலைவர்கள் பலரும் பாரீஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT